search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IG"

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாருக்குள்ளாகி இருக்கும் ஐ.ஜி. சென்னையில் துணை கமி‌ஷனராகவும், வெளிமாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். போலீஸ் துறையில் நியாயமான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். இதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அரசு பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான இந்த கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


    இந்த கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கூடிய இந்த கூட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை தாங்கினார். கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கூறி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புகார் கூறி இருக்கும் பெண் அதிகாரிக்கும், புகாருக்குள்ளான போலீஸ் ஐ.ஜி.க்கும் விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விசாகா கமிட்டியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தபடுபவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    இதன் மூலம் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் போலீஸ் அதிகாரி மீதான பாலியல் புகார் பற்றி உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே ஐ.ஜி. மீதான பாலியல் விவகாரத்தில் விசாகா கமிட்டி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் விரைவில் மீண்டும் விசாகா கமிட்டி கூட உள்ளது. அப்போது முதலில் பெண் போலீஸ் சூப்பிரண்டை வரவழைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.யிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    ×