search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilayaraja"

    நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB
    இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவதை தவிர்த்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்போது மீண்டும் அந்த பாடல்களை பாட தொடங்கி உள்ளார்.

    இதற்காக இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    “இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். பாடிக்கொண்டுதான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை. என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    அமெரிக்காவில் ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது எனது பாடல்களை யார் பாடினாலும் அதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.



    இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில்தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு திரும்ப பாட ஆரம்பித்து விட்டேன்.

    இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். எனது வேதனை என்னவென்றால் ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல. அவர் எப்படி அந்த பணத்தை வசூலிக்கிறார் என்று சொல்ல வேண்டும். எந்த பாடல்மீது அவருக்கு உரிமை இருக்கிறது என்பதையும் தெளிவாக கூற வேண்டும்.

    அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன். நிறுத்தவே மாட்டேன். இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
    ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Psycho #UdhayanidhiStalin #Myskkin
    உதயநிதி ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ், நித்யா மேனன் நடிக்கின்றனர். இயக்குநர் ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், சைக்கோ பர்ஸ்ட் லுக் வருகிற 7-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அதே தேதியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #Myskkin

    விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையில் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் விமர்சனம். #MerkuThodarichiMalai #MerkuThodarichiMalaiReview
    விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் நடந்து செல்லும் காலம் முதல் ரோடு போட்டு வாகனங்கள் செல்லும் காலம் வரைக்கும் இடையேயான சம்பவங்களை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி.

    இப்படத்தை திரையில் பார்க்கும் போது, கதையோடு ஒன்றி பார்ப்பவர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் நாம் வாழ்ந்தது போல் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.



    சினிமாவில் நகைச்சுவை, காதல், சண்டை என படங்களாக பிரிக்கலாம். ஆனால், இப்படத்தை அங்கு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பதிவாகத்தான் கூறமுடியும். அந்த ஊர் மக்களின் நேர்மை, ஒருத்தருக்கொருவர் உதவுவது, அவர்களின் உண்மைத் தன்மை என சிறந்த அனுபவமாக படத்தை கொடுக்கிறார்கள். 

    நாம் ஏன் அந்த ஊரில் வாழவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. படத்தில் கருத்து ஒன்றும் இல்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் போல் நாம் வாழ வேண்டும் என்றுதான் கருத்தாக சொல்லமுடியும். 

    ஒரு படத்தின் நடிகர்கள் தேர்வே பாதி வெற்றிக்கு சமம் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதுவே முழு வெற்றியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்பவர்களை வைத்தே படமாக்கி இருக்கிறார்கள்.



    இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட நம் மனதில் பதிகிறார்கள். 

    இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். இவரது இசை மென்மையான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது. பாடல்களும் தாளம் போட வைக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அருமை. கேமராவால் தான் நாம் இந்த படத்தை பார்க்கிறோம் என்று நாம் மறந்து விடும் அளவிற்கு பதிவு செய்திருக்கிறார். இவரது கேமரா யதார்த்தமான பதிவாக பதிய வைத்திருக்கிறது. 



    மொத்தத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ சிறந்த அனுபவம்.

    வீடியோ விமர்சனம் பார்க்க:

    இசை கச்சேரிக்காக ஆஸ்திரேலியா வந்திருப்பதால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi
    சென்னை:

    ஆஸ்திரேலிய நாட்டுக்கு இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்று இருக்கும் இசை அமைப்பாளர் இளையராஜா கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை.

    அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் ஐயா. சினிமா துறையிலே தூய தமிழ் வசனங்களை அளித்த கடைசி வசனகர்த்தா ஐயா. அரசியல், சினிமா, தமிழ், கலை, இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய ஐயாவின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.


    இந்த நேரத்தில் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது குழுவினருடன் வந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க முடியவில்லை. ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார். #Karunanidhi #KarunanidhiFuneral #KalaignarAyya #Ilayaraja

    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டியுனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜூம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
    இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

    அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.

    அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.

    இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.

    பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.

    கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.

    இரண்டுமே வெற்றி பெற்றன.

    கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.

    பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

    என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

    சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

    ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

    ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

    ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

    இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

    "என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.

    "நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

    "லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''

    நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.

    பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.

    கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

    பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.

    ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.

    இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.

    பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.

    தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

    கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.

    கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,

    "ஆயிரம் மலர்களே மலருங்கள்!

    அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''

    என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.

    "ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

    பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.

    இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

    முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.

    உதாரணமாக,

    "எட்டடுக்கு மாளிகையில்

    ஏற்றி வைத்த என் தலைவன்

    விட்டு விட்டுச் சென்றானடி

    வேறு பட்டு நின்றானடி''

    "கண்ணன் என்னும் மன்னன்

    பேரைச் சொல்லச் சொல்ல

    கல்லும் முள்ளும் பூவாய்

    மாறும் மெல்ல மெல்ல''

    - இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.

    இதை நான் மாற்ற எண்ணினேன்

    ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

    "இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

    ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

    ஒரே வீணை ஒரே நாதம்''

    இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.

    இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.

    நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.

    `பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.

    என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.

    "ஓரம்போ''

    "சாமக்கோழி கூவுதம்மா''

    "ஒனக்கெனத்தானே இந்நேரமா''

    - போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.

    இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பழசை நினைத்துப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. இன்றைக்கு, ஒரு இசையமைப்பாளராக என்னை ரசிகர்கள் அங்கீகரித்துக் கொண்டால் கூட, ஊரில் இருந்து நான் வரும்போது இந்த நம்பிக்கை இருந்ததா என்றால், "இல்லை'' என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

    "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பாடல்கள் பதிவான நிலையில் ஒரு நாள் அண்ணன் பாஸ்கரிடம் மனம் விட்டுப் பேசினேன். "அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் `பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம், "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால், பிளாட்பாரத்தில் - தெருவில் உட்கார்ந்து ஜனங்கள் முன்பு வாசிப்போம். எங்களுக்கென்ன கவலை!'' என்று சொன்னோமல்லவா! அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும், கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோமா?'' என்று கேட்டேன்.

    பாஸ்கருக்கு என் யோசனை பிடித்தது. "போகலாமே'' என்றார்.

    பீச்சுக்குப்போனால் அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்காக கமல் நடிக்க பாரதிராஜா டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.

    நாங்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், கமலும் பாரதியும் எங்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலும் படங்கள் எடுத்துக்கொண்டோம்!

    "சிகப்பு ரோஜாக்கள்'' படம் பின்னணி இசைக்காக என்னிடம் வந்தது.

    பாரதிராஜா தனது தாயாருடன் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருந்தபோது நானும் பாரதியும் அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. காலேஜ் வரை நடந்து போய் வருவோம். சில சமயம் இரவு 9 மணியைக் கடந்து வீட்டுக்குத் திரும்புவோம்.

    இப்படி ஒரு நாள் `வாக்கிங்' போன நேரத்தில், பாரதி ஒரு கதை சொன்னார். அது புகழ் பெற்ற ஆலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் படம் போல இருந்தது.

    நாங்கள் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே பாழடைந்த பங்களா ஒன்று எங்கள் கண்ணில்படும். அதை பார்த்துத்தான் அந்தக் கதை தன் மனதில் உருவானதாக பாரதி சொன்னார். அந்தக் கதைதான், அவரது டைரக்ஷனில் `சிகப்பு ரோஜாக்கள்' ஆகியிருந்தது. பாரதிராஜா என்றால் கிராமத்துக் கதைகளை மட்டுமே டைரக்ட் செய்வார் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. அதற்குப் பதிலடி தருகிற விதத்தில் இந்தப் படம் வந்திருப்பதை ரெக்கார்டிங்கின் போதே தெரிந்து கொண்டேன்.

    பின்னணி இசைக்கு பொதுவாக எல்லாப் படத்துக்கும் 6 கால்ஷீட்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் படத்துக்கோ 4 கால்ஷீட்டுகளே தேவைப்பட்டது. அதாவது மூன்று நாளில் ஐந்தே பேர்தான் இசைக்குழு. நான்காவது கால்ஷீட்டில் 12 வயலின், 2 செல்லோ அவ்வளவுதான்.

    சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பின்னணி இசைக்கு மொத்தப் பில்லும் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.

    இந்தப் படத்தின் வெற்றி, இதை இந்திக்கும் கொண்டு போனது. இந்தி `ரீமேக்'கில் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார்.

    எப்படி இந்த பின்னணி இசையை கிரியேட் செய்தேன் என்று என்னிடம் அவரே கேட்டு வியந்தார்.

    இந்தப் படத்துக்கு அவர் அமைத்த இசையில் சரியான `எபெக்ட்' வராமல் இருந்திருக்கிறது. இதனால் தமிழில் நான் இசையமைத்த "மியுசிக்'' டிராக்குகளை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் கேட்டிருக்கிறார், பாரதி.

    கே.ஆர்.ஜி. என்னிடம் வந்து "கொடுக்கலாமா?'' என்று கேட்டார். நான் கே.ஆர்.ஜி.யிடம், "என்னைவிட நன்றாக இசையமைப்பார் என்றுதானே ஆர்.டி.பர்மனிடம் பாரதி போனார்! அவரே போடட்டும். டிராக்குகளை கொடுக்கவேண்டாம்'' என்று கூறிவிட்டேன். டிராக்குகளை கொடுத்திருந்தாலும் டைட்டிலில் என் பெயர் வராதல்லவா!''

    நடிகர் பாலாஜி தயாரிப்பாளராகவும் மாறி, படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார். "தியாகம்'' என்ற படத்தை அப்போது தயாரித்தார். சிவாஜி நடித்த இந்தப் படத்தில், "வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள்' கண்ணீர் சிந்தும் உறவுகள்'' என்ற கவியரசு கண்ணதாசனின் அற்புதமான சிந்தனையுடன் கூடிய பாடல் இடம் பெற்றது.

    இதே படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'' என்ற பாடலும் காலத்தில் அழியாதது.

    "நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

    நதி செய்த குற்றம் இல்லை!

    விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா!

    மனிதனம்மா மயங்குகிறேன்''

    - இப்படி போகும் பாடலில் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக சொல்லியிருந்தார் கவியரசர்.

    தமிழில் சிவாஜி நடித்த "வாழ நினைத்தால் வாழலாம்'', "வட்டத்துக்குள் சதுரம்'' என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், `வயசு பிடிசிந்தி' என்ற தெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. இந்த வகையில் என் முதல் தெலுங்குப்படம் இது.

    இதே சமயத்தில் `வ்யா மோஹம்' என்ற மலையாள படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. எனது இசையில் வந்த இந்த முதல் மலையாளப்படம் தமிழில் ஸ்ரீதர் டைரக்ட் செய்த "போலீஸ்காரன் மகள்'' என்ற படத்தின் ரீமேக்.

    தேவர் பிலிம்ஸ் "அன்னை ஓர் ஆலயம்'' என்றொரு படம் எடுத்தார்கள். ரஜினி முதன் முதலாக தேவர் பிலிம்சில் நடித்த படம்.

    இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம் என்று போயிருந்தேன். பெயர், புகழ் என்று எந்த செல்வாக்கையும் உபயோகிக்காமல் சாதாரண பக்தனாக போய் வந்தேன். என்னுடன் மனைவி, குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

    அப்படிப் போனபோது தரிசனம் செய்யக்கூட விடாமல், பிடித்துத் தள்ளுவதும், ஆட்கள் நெருக்குவதுமாக மிகவும் வருந்தும்படியான தரிசனமாகியது. அப்போது நான் பெருமாளிடம், "சந்நிதியில் சாதாரணமாக வந்தேன். உன்னை தரிசிக்க இயலவில்லை. இனிமேல் உன்னைப் பார்க்க வரமாட்டேன்'' என்று சபதம் செய்து விட்டு வந்துவிட்டேன்.

    "அன்னை ஓர் ஆலயம்'' படத்தின் இசை அமைப்பாளர் என்ற முறையில் என்னை படத்தின் டைரக்டர் தியாகராஜன் சந்தித்தார். "ராஜா சார்! அன்னை ஓர் ஆலயம்'' கம்போசிங்கிற்கு திருப்பதி போகலாமா?'' என்று கேட்டார்.

    மூகாம்பிகை போய் என் வாழ்க்கை முறை முற்றிலுமாய் மாறியிருந்த நேரம் அது. எனவே வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தேன்.

    "அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை போகலாமா?'' என்று கேட்டார்.

    அதற்கும் தலையசைப்பில் சரி சொன்னேன்.

    அப்போது திருப்பதியில் ஒரு பத்து காட்டேஜ்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.

    ஐந்து காட்டேஜ்களில் ஒன்றில் நானும், இன்னொன்றில் கவிஞர் வாலியும், என் உதவியாளர்கள் இன்னொன்றிலுமாக இருந்தோம். டைரக்டர் தியாகராஜன், அவரது யுனிட் ஆட்கள் அடுத்த 2 காட்டேஜ்களில் தங்கினார்கள்.

    முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு ராஜதரிசனம் என்று சொல்லி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்துப் போனார்கள்.

    நானும் போனேன். தரிசனம் நன்றாக நடந்தது. என்னிடம் மட்டும் "என்ன! வரமாட்டேன் என்றாயே... வரவைத்துவிட்டேன் பார்த்தாயா?'' என்று சுவாமி கேட்பது போலிருந்தது.

    நானும் மானசீகமாய்ப் பேசினேன். "நீ தரிசனம் கொடுத்தாலும் நீதான் பெரும் ஆள்! தரிசனம் கொடுக்காவிட்டாலும் நீதானே பெரும் ஆள்! இதில் என் மனம் போல் தரிசனம் கிடைத்தால் என்னைப்பற்றி நான் பெருமைப்பட என்ன இருக்கிறது? நீ கொடுத்தால்தானே கிடைக்கும். கொடுத்தாலும் நீயே. கொடுக்காவிட்டாலும் நீயே!'' என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன்.

    அங்கிருந்த ஒரு வாரமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி இருப்பார். தினசரி காலை 4 மணிக்கு எங்களை அழைப்பார். தரிசனம் கொடுப்பார். எங்களை பெருமைப்பட வைப்பார். அதைப் பார்த்து ரசிப்பார்.

    ரெக்கார்டிங் சமயத்தில்தான் இதை வாலியிடம் சொன்னேன். அதிசயப்பட்டார். "யோவ் நீ பெருமாளுக்கு அடியார்யா! அதனால்தான் உன்னை அழைத்து வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.
    திலீப்குமார் - வைஜயந்திமாலா நடித்த "மதுமதி'' உள்பட ஏராளமான இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. தென்னாட்டில் இருந்து முதன் முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "செம்மீன்'' மலையாளப் படத்துக்கு இசை அமைத்தவரும் அவர்தான்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "முள்ளும் மலரும்'' படத்தில் டைரக்டர் மகேந்திரன் முடிவு செய்த இடைவேளை வேறு. இப்போது தியேட்டரில் பார்த்த இடைவேளை வேறு.

    இதனால் என்னைவிட, டைரக்டர் மகேந்திரன் அதிகம் அதிர்ந்து போனார். அதற்கப்புறம் படம் பார்க்கப் பிடிக்காமல் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.

    தியேட்டர் முதலாளி தன் வீட்டில் சமைத்த சாப்பாட்டுடன் எங்களைப் பார்க்க வந்திருந்தார்.

    அவரைப் பார்த்ததும் மகேந்திரன் கோபமாக, "என்ன சார் இது! இடைவேளை இந்த இடத்தில் இல்லையே! எப்படி மாறியது?'' என்று கேட்டார்.

    தியேட்டர் அதிபரோ எங்கள் டென்ஷனை கண்டுகொள்ளாமல் "ஓ! அதுவா... சார்! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நம்ம தியேட்டர் ஆபரேட்டர் இருக்கிறானே, அவன் ஒரு டைரக்டருக்கு மேல சார்! சொன்னா நம்பமாட்டீங்க. இந்த படத்துல இடைவேளை போடற இடம் சரியில்லை. ரஜினி மேல லாரி ஏறுகிற மாதிரி ஒரு சீன். அப்ப இடைவேளை போட்டாத்தான் "ரஜினிக்கு என்னாச்சு?'' என்ற பதட்டத்தோடு படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது "கை மட்டும்தான் போய்விட்டது'' என்று காட்டினால் ஒரு `பஞ்ச்' இருக்கும் என்றான் சார்! சொன்னது சொன்னபடி சீனை கட் பண்ணி முன்னே பின்னே போட்டு எப்படி சூப்பரா பண்ணியிருக்கான் பார்த்தீங்களா? அதனாலதான் நான் அவன் விஷயத்திலே தலையிடறதே இல்லை சார்!'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    அதோடு, டைரக்டர் மகேந்திரனை பார்த்து, "இப்ப படம் எப்படியிருக்கு சார்?'' என்றும் கேட்டார்.

    மகேந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மகேந்திரனைப் பார்த்து, "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா'' என்று பாடினேன்.

    பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

    பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

    இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.

    அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.

    "பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.

    முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.

    பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.

    காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

    லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடையுறு இல்லாதிருந்தது.

    இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.

    சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.

    பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.

    நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.

    தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.

    இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.

    அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.

    சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.

    இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.

    இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்யுமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.

    ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.

    "பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.

    இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மிïசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.

    ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மியுசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மியுசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மிïசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மிïசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

    தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக "சிகப்பு ரோஜாக்கள்'' என்ற படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.

    கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தை, ஒரு "மர்டர் மிஸ்ட்ரி'' படமாகத்தர பாரதி திட்டமிட்டிருந்தார். படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.'' அடுத்தது வாலி எழுதிய "நினைவோ ஒரு பறவை'' பாடல்.

    ரெக்கார்டிங்கை பார்ப்பதற்காக, கமல் வந்திருந்தார். ரிகர்சல் பார்த்து முடித்த நேரத்தில் "பிரேக்'' விடப்பட்டது

    அந்த நேரத்தில் கமல் சில ஆங்கிலப் பாடல்களைப் பாடிக்காட்டினார். நன்றாக இருந்தது.

    நான் கமலிடம், "படத்திலும் நீங்களே இந்தப் பாட்டை பாடிவிடுங்கள்'' என்றேன்.

    "ஓ பாடலாமே'' என்றார். ஜானகியுடன் சேர்ந்து பாடினார். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே "ஹிட்'' ஆயின. படமும்தான்.

    பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, தற்போது தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. #Thanu #60VayaduMaaniram
    பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் கலைப்புலி தாணு. இவர் தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது அடுத்த படத்தை தயாரிக்க தொடங்கிவிட்டார் தாணு. ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



    மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
    யுவன் இசையமைத்து தயாரித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டில் கலந்துக் கொண்ட இளையராஜா, மற்ற இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #Ilayaraja
    கே புரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். 

    அதன்பின் இளையராஜா பேசும்போது, ‘பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்’ என்றார்.



    சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘நான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை’ என்றார்.

    இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும்போது, ‘நான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.
    பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi #Mysskin
    நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    முன்னதாக மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அதே கதையில் உதயநிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த படத்தை உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். 



    மிஷ்கின் - சாந்தணு கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது. #Udhayanidhi #Mysskin 

    ×