search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India hesitant"

    • ஷேக் ஹசீனா மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர்கள் தற்போது இடைக்கால அரசில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

    ஜூனில் தொடங்கிய அந்த போராட்டம் கடந்த மாதம் நாடு முழுவதும் பெரும் கலவரமாக மாறியது. இதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்களில் 11 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் தலைநகர் டாக்காவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு பேரணி நடத்தினார்கள்.

    இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் தனது தங்கையுடன் டெல்லிக்கு தப்பி வந்தார். டெல்லி அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது வீட்டுக்கு இந்திய விமானப்படையின் கருடா பிரிவு வீரர்கள் பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    ஷேக் ஹசீனா இந்தியாவில் தற்காலிகமாக தங்கியிருக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர் முதலில் லண்டனில் தஞ்சம் அடைய திட்டமிட்டார். ஆனால் இங்கிலாந்து அரசு அதில் உள்ள சட்டசிக்கல்களை சுட்டிக் காட்டியதால் அந்த திட்டத்தை அவர் கைவிட்டார்.

    பிறகு அமெரிக்கா செல்லலாம் என்று நினைத்தார். ஆனால் அமெரிக்கா அவரது விசாவை அதிரடியாக ரத்து செய்தது. இதனால் அங்கும் அவரால் செல்ல இயலவில்லை.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனா வேறு நாட்டில் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளார். வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் அவரது உறவினர்கள் பலர் உள்ளனர். எனவே அங்கு செல்வது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார்.

    மேலும் ஐக்கிய அரபு அமீரகம், பெலாரஸ், கத்தார், சவுதி அரேபியா, பெல்ஜியம் ஆகிய 5 நாடுகளிடமும் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது ஷேக் ஹசீனா மிகவும் குழப்பமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அவர் எந்த நாட்டுக்கு எப்போது புறப்பட்டு செல்வார் என்பது மர்மமாக உள்ளது.

    இதையடுத்து ஷேக் ஹசீனா மேலும் 2 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் எந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்ல விரும்புகிறாரோ அதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் ஷேக் ஹசீனா இந்தியாவில் நிரந்தரமாக தஞ்சம் அடைந்து தங்கியிருக்க விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஷேக் ஹசீனா வெளிநாடு செல்லும் விவகாரத்தில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது.

    இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் மகன் அளித்த பேட்டியில், "எனது தாய் எந்த நாட்டிடமும் தஞ்சம் அடைய இதுவரை அனுமதி கேட்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை" என்று கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் ஷேக் ஹசீனா இந்தியாவில் நிரந்தரமாக தங்க விரும்புவதாக கூறப்படுகிறது.

    1975-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் ஷேக் ஹசீனா டெல்லியில் பந்தரா சாலையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அதே போன்று இருந்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

    அந்த காலக்கட்டத்தில் இருந்த சூழ்நிலை தற்போது இல்லாத நிலையில் ஷேக் ஹசீனா சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாக கூறி வங்காளதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில் வங்காளதேசத்துடன் கொள்கை ரீதியாக பிரச்சனைகள் வரலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

    ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர்கள் தற்போது இடைக்கால அரசில் உள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு சுமூக உறவை ஏற்படுத்த முயன்று வருகிறது. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் நிலையில் அந்த சுமூக உறவு பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    தற்போதைய சூழ் நிலையில் வங்காளதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்கள் சீனாவுக்கு சாதகமாக திரும்பியுள்ளன. அதை தடுக்க அங்குள்ள இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.

    எனவே ஷேக் ஹசீனாவுக்கு நிரந்தர அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓரிரு நாட்களில் இதில் தெளிவான நிலை எட்டப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×