search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India ready"

    பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் 5 நகரங்களில் தயார் நிலையில் உள்ளது. #PulwamaAttack #CRPFAdvisory
    புதுடெல்லி:

    காஷ்மீரில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நேற்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தானில் உள்ள பாலகோட் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அந்த முகாமில் இருந்த சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இது தவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் முசாபராபாத், சகோதியில் செயல்பட்ட 2 முகாம்களும் நேற்றைய தாக்குதலின்போது அழிக்கப்பட்டன. முகாம்களை இழந்ததோடு, கணிசமான அளவுக்கு முக்கியமான பயங்கரவாதிகளையும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பறிகொடுத்துள்ளது.

    இந்திய விமானப் படையின் குவாலியர் பிரிவில் உள்ள 12 மிராஜ்ரக விமானங்கள் 21 நிமிடங்களில் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த திடீர் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பயங்கரவாதிகள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு 1000 கிலோ அளவுக்கு இந்தியா வெடிகுண்டுகளை வீசி இருப்பது உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    நேற்றைய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்குள், இந்திய போர் விமானங்கள் சுமார் 60 கி.மீ. அளவுக்கு சென்று விட்டு வந்தன. இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் இந்திய விமானபடையால் எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக ஊடுருவ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பாகிஸ்தான் அரசியல்வாதிகளாலும் ராணுவத்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    எனவே இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கடி கொடுத்த படி உள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் நேற்று ராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

    பாகிஸ்தானுக்கு ஏற்கனவே ஈரான் மூலம் நெருக்கடி நீடித்தபடி உள்ளது. ஈரான் எல்லை அருகே ராணுவத்தை குவித்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது எப்படி தாக்குதலை தொடங்குவது என்று தயங்கியபடி உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அவசரப்பட்டால் அது மிகப்பெரிய போருக்கு வழிவகுத்து விடும், அது இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் அதிக அழிவை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்துள்ள இம்ரான்கான் என்ன முடிவு எடுப்பது என்பது புரியாமல் தவித்தபடி உள்ளார்.

    1971-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய விமானப்படை குண்டு மழை பொழிந்து இருப்பதால் பயங்கரவாதிகளும் மிரண்டு போய் உள்ளனர். இந்தியா மீது உடனடியாக நேரடி தாக்குதல் நடத்தும் பலமும் அவர்களிடம் இல்லை. இத்தகைய காரணங்களால் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் கோழைத்தனமான மறைமுக தாக்குதல்களை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள தங்களது சிலிப்பர் செல்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள் என்று மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த சிலிப்பர் செல்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த சிலிப்பர் செல்களை மசூத்அசார் நிறைய மூளை சலவை செய்து வைத்துள்ளான்.

    இந்திய ராணுவத்தால் தனது உறவினர்கள் கொல்லப்படும் போதெல்லாம் இந்த அப்பாவி சிலிப்பர்செல்களை தற்கொலை தாக்குதல் நடத்த தூண்டி விடுவது மசூத்அசாரின் வழக்கமாகும். “புனிதப் போர்” என்று ஏமாற்றப்படும் சிலிப்பர் செல்களும் அதை நம்பி தாமாக முன் வந்து தற்கொலை தாக்குதல் நடத்துவது உண்டு.

    இத்தகைய தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை மீண்டும் எச்சரித்ததைத் தொடர்ந்து வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்களில் பாதுகாப்பு 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மிக, மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதுபோல குஜராத், பஞ்சாப், காஷ்மீரில் எல்லை நெடுகிலும் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் பதிலடி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்குமாறு எல்லையில் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவமும் திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவின் முப்படைகளையும் மிகப் பெரிய போருக்கு தயாராக இருக்கும் வகையில் மத்திய அரசு களப்பணிகளை செய்து வைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் சிறிய தாக்குதலுக்கு முயற்சி செய்தாலும் பலத்த பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடல் வழியாக பாகிஸ்தான் வாலாட்ட கூடும் என்று மேற்கு மண்டல கடற்படையையும் முழு அளவில் மத்திய அரசு தயார்படுத்தி உள்ளது. மும்பை கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான போர் கப்பல்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

    அந்தமானில் உள்ள கடற்படையும் விரைந்து வரும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் குறிப்பாக மும்பை, டெல்லி மீது பாகிஸ்தான் ராணுவம் அல்லது பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட முயற்சி செய்யலாம் என்று ராணுவ உளவுப் பிரிவு கூறியிருந்தது. இதையடுத்து டெல்லி, மும்பை நகரங்களில் 72 மணி நேர உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் வாகன சோதனை உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் குஜராத், பஞ்சாபில் உள்ள 5 முக்கிய நகரங்களும் 72 மணி நேர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 7 நகரங்களிலும் சந்தேகப்படும்படி ஊடுருவி வருபவர்களை சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் இருக்கும் “சிலிப்பர்செல்கள்” என்ற சந்தேகப்பட்டியலில் இருப்பவர்கள் மீது 24 மணி நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படை 3 முகாம்களை அழித்ததும் குஜராத் மாநிலத்துக்குள் உளவு பார்க்க குட்டி விமானத்தை பாகிஸ்தான் அனுப்பி இருந்தது. அதை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். இதையடுத்து குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து குஜராத்தில் எந்த தாக்குதல் முயற்சி நடந்தாலும் பதிலடிக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத் மாநில போலீசார் அனைவருக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் போலீசார் அனைவரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #PulwamaAttack  #CRPFAdvisory
    ×