என் மலர்
நீங்கள் தேடியது " India"
- ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது.
- ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன.
புதுடெல்லி :
சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான 'ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட்' நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் நாட்டின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றியடைவோம். ஏனெனில் உணவுப் பொருட்களின் விலைகள் மீதான வினியோக பக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்ய ஒரு மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை தெளிவாக உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நெகிழ்வுத்தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
பணவீக்கம் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படப் போகிறது. ஆனால் இந்தியாவுக்குள், விவசாய பொருட்கள் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் நாம் வசதியான நிலையில் இருக்கிறோம்.
நல்ல, வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன்.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை நாட்டின் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படுத்தியுள்ளது. எனக்கு மலிவு விலைகள் இருக்க வேண்டும், நிலையான விலைகளை கொண்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகளாவிய பொது பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சரக்குகளின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டால், அது நம்மில் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
பல நாடுகளைப் போலவே, ரஷியாவிலிருந்தும் இந்தியாவின் இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் ரஷியாவிலிருந்து வாங்குவதற்கு விலை காரணி சாதகமாக உள்ளது. இதில் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
- பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது.
- இந்தியா அமைதியை தான் விரும்புகிறது.
பெங்களூரு :
பெங்களூரு இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் தேசிய பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு பல மொழிகளில் தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா வசந்தபுராவில் உள்ள ராஜாதிராஜ கோவிந்தன் கோவிலில் வைத்து நேற்று நடைபெற்றது.
இதில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பல மொழிகளில தயாரிக்கப்பட்ட பகவத்கீதை நூலை வெளியிட்டு பேசியதாவது:-
குருசேஷத்திர போர்க்களத்தில் தான் பகவான் கிருஷ்ணர் காவிய விரிவுரையை நிகழ்த்தினார். இது பகவத் கீதை என்று நம்மால் அறியப்பட்டது. பகவத் கீதையின் உள்ளடக்கம், உலகளாவியதாக உள்ளது. பகவத் கீதையை படிப்பதும், அதை வாழ்க்கையில் உள் வாங்வதும் ஒரு நபரை அச்சமின்றி வாழ வழிகாட்டுகிறது.
போர், வன்முறையை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. இந்தியா அதனை விரும்புவதும் இல்லை. அமைதியை தான் விரும்புகிறது. என்றாலும், அநீதி மற்றும் ஒடுக்கு முறைக்கு நடுநிலையாக இருக்க முடியாது. அநீதி மற்றும் அடக்கு முறைக்கு நடுநிலையாக இருப்பது நமது இந்தியாவின் இயல்பு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
(ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிதின கொண்டாட்டம் நடைபெற்றது
- மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் ராணுவத்தினர் மரியாதை
திருச்சி:
கடந்த 1971-ம் ஆண்டு 13 நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16-ந்தேதி விஜய் திவாஸ் தினம் எனப்படும் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தப் போருக்குப் பின்னர் தான் கிழக்கு பாகிஸ்தான் பகுதி வங்கதேசம் என்ற புதிய நாடாக உதயமானது. வங்காளதேசம் இந்நாளை சுதந்திர தினமாகக் கொண்டாடிவரும் அதே வேளையில் இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் திவாஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் கார்கில் போரில் எதிரிகளை வீழ்த்தி வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல்.தீபக்குமார் தலைமையில், மேஜர் சரவணன் சகோதரி டாக்டர். சித்ரா, தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் (2) லெப்டினன்ட் கர்னல் அருண்குமார் ஆகியோர் மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் என்சிசி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.
- இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.து.அமரமூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பாலு உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:
இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இவர் மட்டுமே தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களுக்காகவும் போராடி வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு கொண்டு வந்த அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவரும் மு.க.ஸ்டாலின். ஜனநாயகத்தின் குரல் வலை நெரிக்கப்படுகிறது. இது நாளை நமது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தான் குரல் கொடுத்தார். உதயநிதி அமைச்சரானது குறித்து சசிகலாவும், தினகரனும் பேசுவது ஏனென்றால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றி, அதன் மூலமாக ஆட்சியை கைப்பற்றி, தமிழகத்தை சுருட்டி வளைத்து விடலாம் என நினைத்தார்கள். அது நடக்கவில்லை என்பதால் அந்த வெறுப்பில் பேசுகிறார்கள். அதேபோல், ஒரு ஆட்சி எப்படி நடத்த கூடாது என உதாரணமாக நடத்தி காட்டியவர் தான் எடப்பாடி பழனிசாமி. இவர்களே கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், தற்காலிக ஒருங்கிணைப்பாளர் என புதிய புதிய பொறுப்புகளை வைத்துக்கொள்வர். தற்போது, அந்த சீட்டையும் நீதிமன்றம் பிடுங்கிவிட்டது. உங்களது சீட் எங்கு உள்ளது என கண்டுபிடியுங்கள்.
தற்போது பெயருக்கு முன்னாள் என்ன பொறுப்பு போடுவது என்றே தெரியாமல் பழனிசாமி குழம்பிபோய் உள்ளார். உங்களது விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் பதில் சொல்வார். காந்திருங்கள், காலம் இன்னும் உங்களுக்கு பல அதிர்ச்சிகளை தர காத்திருக்கிறது. தமிழக எம்எல்ஏக்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடு போகப்போக அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- மேற்குப் பகுதி எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை.
- இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட முடிவு
இந்தியா-சீனா ராணுவ கமாண்டர் அளவிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சு சீனாவில் உள்ள சுசுல் மால்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 17ந் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக் கோட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது என்று இருதரப்பினரும் அப்போது ஒப்புக் கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது என்று இந்த கூட்டத்தில் முடுவு செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது.
- இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது
கொழும்பு :
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. இந்தியா கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) நிதியை வாழ்வாதார நிதி போல அந்த நாட்டுக்கு வழங்கியது.
கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அன்னியச்செலாவணி கையிருப்புக்காக இந்த உதவியை அறிவித்தது.
பின்னர் எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,100 கோடி) நிதி உதவியை அறிவித்தது. இந்தக் கடன் பின்னர் 700 மில்லியன் டாலராக (சுமார் ரூ.5,740 கோடி) ஆக அதிகரிக்கப்பட்டது.
இப்படி இலங்கைக்கு இந்தியா, 'முதலில் அண்டை நாடு' என்ற கொள்கையின் பெயரால் தாராள உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பஸ்களை வழங்கியது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், " இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பஸ்களை வழங்கினார். இந்த வகையில் 500 பஸ்களை இந்தியா வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியா வளர்ந்து வருகிறது.
- மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
டாவோஸ் :
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது.
- இம்ரான்கான் தனது இல்லத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
லாகூர் :
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் லாகூரில் உள்ள தனது இல்லத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களின் சட்டசபைகள் கடந்த மாதமே கலைக்கப்பட்டுவிட்டன. இந்த மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்தும் தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் அகிம்சை முறையில் சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன். இதில் முதல் ஆளாக நான் சிறைக்குச் செல்வேன்.
சட்டத்தின் ஆட்சி இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிர்காலம் இருக்காது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியா முன்னேறுவதற்கு காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான். இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதற்கு முதலில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திருப்பி அளிக்க வேண்டும்.
இவ்வாறு இம்ரான்கான் கூறினார்.
- ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன.
- நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது.
புனே :
புனேவில், சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு நாட்டுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால், தேச பாதுகாப்பு போல், கூர்மையான சவால்கள் வேறு எதுவும் இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக நமது மேற்கு எல்லையில் நமக்கு சோதனைகள் கொடுத்தனர். இப்போது நிலைமையில் சற்று மாற்றம் வந்துள்ளது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சில விஷயங்கள் நடந்தன. வடக்கு எல்லையில் நமக்கு சோதனை அளிக்கிறார்கள். இந்த சோதனைகளை இந்தியா எப்படி கடந்து வந்துள்ளது என்பதுதான் நமது திறமையை காட்டுகிறது.
தேசத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நாடு என்பதுதான் இப்போது இந்தியாவுக்கு உள்ள கவுரவம். இது ஒரு சகிப்புத்தன்மையும், பொறுமையும் கொண்ட நாடு. மற்றவர்களுடன் சண்டை போடும் நாடு அல்ல. ஓரங்கட்டக்கூடிய நாடு அல்ல.
நம்மை சுயேச்சையான நாடாக உலகம் பார்க்கிறது. நாம் நமது உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்காமல் தெற்குலக நாடுகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பதாக உலகம் பார்க்கிறது.
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்த காலகட்டத்தில், எந்த அமைப்பிலும் இடம்பெறாத நாடுகளின் நலன்களுக்காகவும் பாடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
- டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி கைப்பேசிகள் மற்றும் ஒஎஸ் அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்ய சோதனை செய்ய ஆய்வகங்களை கட்டமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில் அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், 2026 ஆண்டு வாக்கில் மின்னணு உற்பத்தியில் 300 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ர அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.
பாதுகாப்பான ஒஎஸ் அப்டேட் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் குறித்த தரக்கட்டுப்பாட்டு பணிகளை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) கவனித்துக் கொள்ளும் என இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உற்பத்தியாளர்கள், இதர சந்தையை சேர்ந்த பங்குதாரர்களுடன் கூடுதலாக சந்திப்புகளை நடத்திய பின் புதிய விதிகள் விதிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இவற்றை ஒரு ஆண்டிற்குள் பின்பிற்ற வேண்டும்.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்த்த அனிருத்
இந்நிலையில் இந்த போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.