search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Family Offloaded"

    லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த இந்திய தம்பதியரின் குழந்தை அழுததால் அவர்களை விமான ஊழியர்கள் கடுமையாக திட்டி கீழே இறக்கிவிட்டுள்ளனர். #BritishAirways
    புதுடெல்லி:

    லண்டனில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐஇஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட்ட போது, அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது. உடனே விமான ஊழியர் ஒருவர், குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார். இதனால் பயந்துபோன குழந்தை, இன்னும் அதிகமாக கதறி அழத் தொடங்கியது.

    குழந்தையை தாய் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைக்க முயன்றுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இந்திய குடும்பத்தினரும் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்து அழுகையை நிறுத்த முயன்றுள்ளனர்.

    இதற்கிடையே விமானம் ஓடுபாதையை நெருங்கியது. அப்போதும் குழந்தை அழுதுகொண்டிருந்ததால், மீண்டும் அங்கு வந்த விமான ஊழியர், விமானத்தை டெரிமினலுக்கு திரும்பும்படி கூறியுள்ளார். அங்கு சென்றதும், இந்திய அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை கீழே இறக்கிவிட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கு உதவி செய்த மற்றொரு இந்திய குடும்பத்தினரையும் கீழே இறக்கிவிட்டுள்ளனர்.



    பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி, இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எந்த வகையான இனப் பாகுபாட்டையும் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். #BritishAirways 
    ×