search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indians Stranded In Nepal மானசரோவர் யாத்திரை"

    மோசமான வானிலையால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்பதற்கு நேபாளத்தில் உள்ள தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #MansarovarYatra #IndiansStrandedInNepal
    புதுடெல்லி:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பயணம் தடைபட்டதால் சிமிகோட், ஹில்சா, திபெத் பகுதியில் யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதுதவிர சுமார் 400 பேர் காத்மாண்டு விமானநிலையத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

    சென்னையில் இருந்து கடந்த மாதம் 20-ந் தேதி கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 23 பேரில் 4 பேர் கடந்த 30-ந் தேதி சென்னை திரும்பி விட்டனர். தீனதயாளன் என்பவர் உள்பட மற்ற 19 பேர் அங்கு மழை மற்றும் கடும் குளிரில் சிக்கி, ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவியும் ஒருவர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    சீனா-நேபாளம் எல்லையில் உள்ள ஹில்சா என்ற இடத்தில் தாங்கள் சிக்கி தவிப்பதாகவும், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    ‘நேபாளத்தில் உள்ள நேபாள்கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதிகளில் இந்திய தூதரக அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். அவர்கள் இந்திய பக்தர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்து கொடுக்கின்றனர். சிமிகோட்டில் வயது முதிர்ந்த பக்தர்களுக்காக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹில்சாவில்  போலீஸ் உதவி கோரப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மலைப்பகுதியில் சிக்கியுள்ள பக்தர்களை மீட்கும்படி நேபாள ராணுவத்திடம் கூறியிருக்கிறோம்.



    நேபாளத்தில் சிக்கியுள்ள பக்தர்கள் குறித்து இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்காக உதவி எண்கள் அறிவித்துள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் தகவல்களை அறிந்துகொள்ளவும் தனித்தனியாக அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.’ என சுஷ்மா டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவு செய்துள்ளார். உதவி எண்களையும் குறிப்பிட்டுள்ளார். #MansarovarYatra #IndiansStrandedInNepal #IndianPilgrimsStranded
    ×