என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "inscription"
- கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
- கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.
பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.
இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.
"தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.
கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.
- எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
- தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.
மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.
- 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.
- இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.
விழுப்புரம்:
செஞ்சியை அடுத்த நெகனூர் பட்டி கிராமத்தில் குன்றின் மீதுள்ள அடுக்குப் பாறையில் சமணப்படுக்கையும் 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன. இந்த பாறைகளின் அருகே வெடிவைத்து கல் உடைத்ததில் பாறையில் விரிசல் ஏற்பட்டது.இது குறித்து கடந்த 2020 -ம் ஆண்டு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் நெகனூர்பட்டி மற்றும் தொண்டூர் கிராமத்தில் உள்ள கிராமிய கல்வெட்டு களை பாதுகாக்கப்பட்ட வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்தார். தற்போது இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சின்னம் உள்ள இடத்திலிருந்து 300மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானமும் வெடி வைத்தலும் செய்யக்கூடாது. ஆனால் 87 மீட்டர் தூரத்தில் பாறைகளை வெடிவைத்து உடைத்து வருகின்றனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு தொல்லியல் துறை சென்னை அலுவ லகத்தை சேர்ந்த உதவி பொறியாளர் ராஜேஷ் இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் பின்னர் அவர் இது குறித்து செஞ்சி தாசில்தாரிடமும், போலீசிலும் அவர் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஜமீனா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். யாரேனும் வெடி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கல்வெட்டுகளில் உள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறினார்.
- முன்னதாக தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை ஒருங்கிணைப்பில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் பொருண்மை யிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ரவி கல்வெட்டுகள் மற்றும் கல்வெட்டுகளில் மக்கள் அறிந்து கொள்ளும் பல்வேறு வகையான செய்திகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் பெருமாள் மாணவ மாணவிகள் இலக்கணம் பயில்வதால் ஏற்படும் சிறப்புகள் பற்றியும் காலம் காலமாக இலக்கணம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் ஆற்றல் உடையது என்பதைப் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.
இந்நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து.
கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜுலு செயலர் சுந்தர் ராஜு ,முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநரும்,மகரிஷி வித்யா மந்திர்சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், த. விஜய சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் துணை முதல்வர் (கல்விசார்) எஸ். நெல்லிவனம், துணை முதல்வர் (நிர்வாகம்) பவித்ரா வாழ்த்துரை வழங்கினர்.
இக்கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி வரவேற்றார்.
முடிவில் தமிழ்த் துறை துணைதலைவர் கிருஷ்ண ராஜ் நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் அனைத்து துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
- வீரனின் தியாகத்தை போற்றும் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
- கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வா ளர்களான செல்ல பாண்டி யன், ஆய்வாளர்.ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்ட போது பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர். இந்த நடுகல் பற்றி அவர்கள் கூறிய தாவது:-
பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்ற கோளத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.
சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என 16 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் வருடங்கள் அறுபதில் 12 வது வருடமாக வரும் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும்,இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர் என்றும் இந்நடுகல்லின் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பாளையம் பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் பழமையான சத்திரத்தில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பழமையான சத்திரம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரை பாண்டியநாடு ஆய்வு மையத்திற்கு தெரிவித்தார். மையத்தின் ஒட்டன்சத்திரம் அலுவலகத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் அரில்டாட்டில், லட்சுமண மூர்த்தி ஆகியோர் சத்திரத்திலிருந்த 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.
இந்த பழமையான சத்திரம் வழிப்போக்கர்கள் தங்க அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை தொடர்பற்று காணப்படுகின்றன.
சத்திரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டபோது கல்வெட்டுகள் இடம் மாறி இருக்க வாய்ப்புள்ளது. இதன் மறு கட்டமைப்பு காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கல்வெட்டில் குறுநில மன்னன் கலிய அதியமான் பெயர் இடம் பெற்றுள்ளது. ராஜராஜேஸ்வரி என்ற நபர் கலிய அதியமானின் கீழ்கட்டுப்பட்டவர். இந்த சத்திரத்தை பாதுகாத்தார். பொறுப்பாளராக இருந்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன.
இச்சத்திரத்தில் வழிப்போக்கர்களுக்குமூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. வழிப்போக்கர்கள் மட்டுமல்லாது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதையும் நோக்கமாக கொண்டு இச்சத்திரம் செயல்பட்டது கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது என்றனர்.
- புதுக்கோட்டை அருகே 1000 ஆண்டுக்கு முந்தைய நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதார கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது
- புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை)குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் அங்கு கள ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தில் இருந்த கல்வெட்டை படியெடுத்தனர். இதில் திருவாடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிான் என்பாரின் உத்தரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது என அதில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 வருடம் ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை(சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக்கொண்டு வந்துள்ளார்.
குளத்துகுடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கைகட்டு ப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார், போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றி உதவியுள்ளார். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.
மூன்றரை அடி உயரம் , ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லில், 14 வரிகளில் "சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ . விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் உத்திரவுபடி கட்டி முடித்தது" என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது.ஆதீனம் கல்வி , சமூக ஒற்றுமை , பொதுப்பணி , தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு பணிகளில் ஈடுபடுத் திக்கொண்டுள்ளதையும் , ஆன்மீகப்பணியோடு அறப்பணிகளையும் செய்துள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது என்றார். ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ந.ரமேஷ் குமார் உடனிருந்தார்,
- 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது
- குளத்தின் நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும் என தகவல் பதிவு பொறிக்கப்பட்டுள்ளது
கந்தர்வக்கோட்டை,
கந்தர்வக்கோட்டை அருகே கலலுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டியில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,
சம்பட்டிப்பட்டி கல்வெட்டில் 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லின் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வள நாடு, அன்பில் எனப்படும் அம்புக் கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் இவ்வூரில் இருக்கும் பகவாந்ராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு சம்பட்டிப்பட்டியில் அமைந்துள்ள பிரமன் வயலை மானியமாக வழங்கிய மன்னின் உத்தரவு, தாமிரத்தில் எழுதி சாசன மாக்கப்பட்டதையும், நிலத்தின் 4 எல்லைகளும் வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைகல் நடப்பட்டதையும் பொது ஆண்டு 1758-ல் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரம்ம குளத்தின் நீரை பயிருக்காக மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்றும்,
இதற்கு இடையூறு செய்வோர் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.
- கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
உடுமலை :
மடத்துக்குளம் அருகே கடத்தூர் கிராமத்தில் சித்திரமேழி கல்வெட்டு உள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- கடத்தூரில் உள்ள சித்திரமேழி நாட்டார் கல்வெட்டானது வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப்பெரிய கல்வெட்டாகும்.சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.
இந்த கல்வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு என அப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.
கடத்தூர் மருதீசர் கோவிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் கொழுமம் கோவில்களிலும், நிலக்கொடை சார்ந்த கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.ஆனால் இந்தக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக உள்ளது. இவ்விடத்தில் மிகப்பெரிய ஒரு கால்நடை சந்தை இருந்துள்ளது. அதைச் சுற்றி பாதுகாப்பாகவும் அகழியாகவும் நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்ததால் தான் இந்த கடத்தூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இடத்தில் கோட்டை இருந்ததையும் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்தால் வரலாறு தெரிய வரும் என்றனர்.
- நாகையில் மாணவர்களுக்கு பழங்கால கல்வெட்டு குறித்த பயிற்சி முகாம் நடை பெற்றது.
- முகாமில் மாணவர்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட அருங்காட்சியகமும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முதல் நாள் பயிற்சியில்,மாணவ-மாணவிகள் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் பயன்படுத்திய கருவிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
அப்போது அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள புதைபொருட்கள் பற்றியும், அவை கண்டெடுக்கப்பட்ட இடம், காலம் ஆகியவை குறித்தும் மாணவ - மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.பின்னர் நாகை காயாரோகண கோவில் சென்று நேரடியாக கல்வெட்டு படி எடுத்தல், ஓலைச்சுவடி அமைப்பு முறை, வடிவம், பராமரிப்பு ஆகியவற்றை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து 2-ம் நாள் பயிற்சியில் மதுரை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியர், கல்வெட்டுகள் எழுத்துமுறை, கிரந்த, பிராமி, வட்டெழுத்துக்கள், குறியீடு, கல்வெட்டுகள் தோன்றிய விதம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
முகாமில் கல்லூரி முதல்வர் பொன்னி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.
- ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.
- ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ஓரியூர் கீழக்குடியிருப்பில் கல்வெட்டு இருப்பதாக நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், ஓரியூர் கண்ணன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அந்த கல்வெட்டை ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கம். சேதுபதி மன்னர் கால சூலக்கற்களில் பெரும்பாலும் கல்வெட்டு இருக்கும். ஆனால் பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை. சூலம் மட்டுமே இருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில எழுத்துகள் அழிந்துள்ளன. எனினும் முயன்று படித்து இதன் முழு தகவலும் அறியப்பட்டது.
அதாவது புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் சிவன் கோவிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கும் காராண்கிழமை கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டில் ஓரியூர் எனப்படும் ஊர் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் எனவும், அதன் ஒரு பகுதியான கீழக்குடியிருப்பு கீழைக்குறுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை. இந்த கல்வெட்டின் எழுத்து வடிவத்தை கொண்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தது எனலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது.
- கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கல்வெட்டு செங்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதனை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் காமராஜர் பேத்தி காமராஜ்கமலிகா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராம் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி வேலுசாமி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்