search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interim Bans"

    சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    சென்னை:

    தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. பொன் மாணிக்கவேல் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்கில் 2017-ம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் சிபிஐக்கு மற்றியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.  மேலும் மனுதாரரின் மனுவுக்கு தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

    ‘ஒரே நாளில் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய நீங்கள், ஓராண்டாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? ஒரு நிமிடம் கூட இந்த அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். #IdolTheftCases #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC
    ×