search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet dropage"

    • அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் கல்வி ஊக்கதொகை பயன்பெறலாம்.
    • சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் மாணவிகள் தவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை திட் டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படும்.

    இதன்கீழ்அரசு பள்ளிகளில் நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் மீட்பு பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசு துறைகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து தற்போது அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 30ந் தேதிக்குள் தகுதியான மாணவர்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது.இதற்கென பிரத்யேக மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சர்வர் கோளாறு காரணமாக பாதியில் இணையதளம் முடங்கிவிடுதால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

    திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், அரசு கலை கல்லூரியை பொருத்தவரை அரசு பள்ளி மாணவிகளே அதிகம் சேர்கின்றனர். வகுப்பில் 85 சதவீதம் பேர் இதற்கு தகுதிபெறுவர். இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கேட்கப்படும்.சர்வர் பிரச்சினையால் பாதியிலேயே இணையதளம் முடங்கிவிடுகிறது. நாளொன்றுக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்

    சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், மாணவிகள், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அவசியம் தேவை. பொறுப்பாசிரியர்கள் இதனை உள்ளீடு செய்ய வேண்டும். துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.மாணவிகளின் செல்போனிற்கு ஓ.டி.பி., அனுப்பப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடிந்த பிறகு இந்த விவரங்களை உள்ளீடு செய்கின்றனர். இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே தங்களது செல்போன் அல்லது கணினி வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என்றார்.

    ×