search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacko Geo"

    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்கிறது. #JactoGeo #TnGovernment

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் மறியலில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். 450 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணியாற்றாததால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான ஏற்பாடுகள் முடங்கி உள்ளன. கிராமப்புறங்களில் தொடக்க பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை மாவட்ட கலெக்டர்கள் முடுக்கிவிட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தனியாரைவிட பலமடங்கு அதிக சம்பளம் வாங்கி வருவதாகவும், செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எனவே மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்களும் இதில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர்.

    எனவே அரசு பணிகள் முடங்காமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக, போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது இன்றியமையாத சேவைகள் பராமரிப்பு சட்டமான ‘எஸ்மா’ மற்றும் ‘டெஸ்மா’ ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன் முன்னேற்பாடாக உயர்நீதி மன்ற உத்தரவை மீறி பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் 1லட்சம் பேருக்கு தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகள்படி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

    திங்கட்கிழமை பணிக்கு வராவிட்டால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தை ஒடுக்கும் பணியில் அரசு இறங்கி உள்ளதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் குடும்பத்தை யார் கவனிப்பது என்ற குழப்பமும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது

    இதற்கிடையே ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. வழக்கில் நிலையை பொறுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய உள்ளனர். #JactoGeo #TnGovernment

    ×