search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jaundice disease"

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் 3 வகையான தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. #HIVBlood #PregnantWoman #chennaihighcourt
    சென்னை:

    எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 9 டாக்டர்கள் அடங்கிய குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கர்ப்பிணி பெண் மனது அளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மனநல சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது 8-வது மாதமாகும். ஜனவரி மாதம் 30-ந்தேதி அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கணித்து உள்ளனர். எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு தரமான சிகிச்சை கொடுத்தால் கருவில் வளரும் சிசுவுக்கு எச்.ஐ.வி. பரவுவதை 99 சதவீதம் தடுக்க முடியும்.

    இதை கருத்தில் கொண்டு அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 3 வகையான தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

    எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து நேரிடையாக எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்படாது. பிரவசம் நடக்கும் போது மட்டுமே குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்தின்போது மிக கவனமாக சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு தீர்மானித்துள்ளது. மேலும் குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு 42 நாட்கள் எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகள் கொடுக்கவும் டாக்டர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தினமும் அடுத்தடுத்து பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. நேற்று நடந்த சோதனையின்போது அந்த பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டாக்டர்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மஞ்சள் காமாலை பாதிப்பை குணப்படுத்தவும் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனி சிகிச்சை முறைகள் தொடங்கி உள்ளன. அந்த சிகிச்சைக்கு பிறகு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணி பெண்ணை முழுமையாக குணப்படுத்த முடியா விட்டாலும் அவரை வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதற்கேற்ப அந்த பெண்ணுக்கு சிகிச்சை முறைகள் நடந்து வருகின்றன.

    கர்ப்பிணி பெண்ணின் ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது என்ற ஆய்வும் நடந்து வருகிறது. அதுபற்றி தெரிய வந்ததும் அதற்கேற்ப சிகிச்சைகளை வழங்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றியது தொடர்பாக மருத்துவத்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் மாலதி தலைமையிலான 5 பேர் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் என்பது பற்றி முடிவு செய்யப்படும். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டிலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 3-ந்தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

    அப்போது தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கை மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பான அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman #chennaihighcourt
    ×