search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery seized"

    முதலியார்பேட்டையில் 3 வீடுகளில் கொள்ளையடித்தவனிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் காந்தி திருநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). கார் டிரைவர். இவரது மனைவி லட்சுமி.

    இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் ரஞ்சித் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள ரஞ்சித் சம்பவத்தன்று வீட்டில் இருந்த லட்சுமியை தாக்கினார். இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த ரமேஷ் தனது நண்பர் தினேஷ் என்பவருடன் மைத்துனர் வீட்டுக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்தை பேனா கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில், படுகாயம் அடைந்த ரஞ்சித் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ரமேஷ் பற்றி திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கொடைக்கானலை சேர்ந்த ரமேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனியை சேர்ந்த தனது நண்பர்கணேசுடன் சேர்ந்து முதலியார் பேட்டை பகுதியில் 3 வீடுகளில் நகைகளை கொள்ளையடித்ததாக திடுக்கிடும் தகவலை ரமேஷ் தெரிவித்தார்.

    இதையடுத்து காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த ரமேஷ் மீது கொள்ளை சம்பவம் குறித்து முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க முதலியார் பேட்டை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரமேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ரமேசின் சொந்த ஊர் கொடைக்கானல். அவர் தேனியை சேர்ந்த தனது நண்பர் கணேசுடன் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதலியார் பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்த கணேஷ் (43) என்பவர் வீட்டிலும்,

    2016-ம் ஆண்டு முதலியார் பேட்டை ரமணன் நகரை சேர்ந்த மதுக்கடை உரிமையாளர் கோபி கண்ணன் (45) என்பவர் வீட்டிலும், இந்த ஆண்டு முதலியார் பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் அன்பே சிவம் (52) என்பவர் வீட்டிலும் நகைகளை கொள்ளையடித்ததாக ரமேஷ் தெரிவித்தார்.

    இதையடுத்து ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடைக்கானலில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    ரமேசுடன் சேர்ந்து கொள்ளையடித்த அவரது கூட்டாளி கணேஷ் ஒரு திருட்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×