என் மலர்
நீங்கள் தேடியது "judge"
- போலீசார் பறிமுதல் செய்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
- இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
போலீசார் பறிமுதல் செய்த அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேநேரம் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது.
பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
மேலும் தற்போதைய நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
- 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,
நீதிபதிகள் வருகை
மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார்.
தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

ஜனாதிபதி ஆட்சி
கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
மோடி எப்போ வருவார்?
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
- சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா. அவரது வீட்டில் கடந்த 14-ந்தேதி தீ விபத்தின்போது ஒரு அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது. சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நீதிபதி வர்மா அலாகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே. உபத்யாய் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கத்தை கத்தையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஹோலி கொண்டாட்டத்தின் போது நீதிபதி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் வர்மா. இவர் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனால் அவர் டெல்லியில் ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி மாடிக்கும் பரவியது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பிறகு தீயணைப்பு படை வீரர்கள் நீதிபதி வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று முழுமையாக தீ அணைக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஆய்வின்போது அறைகளில் சில பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இதுபற்றி விசாரணை நடத்தினார். பிறகு கொலிஜியம் உறுப்பினர்களுடனும் ஆலோசனை செய்தார்.
அதன் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி பதவியில் இருந்து யஸ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
இதற்கிடையே, நீதிபதி வீட்டில் எரிந்து பணத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தீயை அணைக்கும் பணியின்போது நீதிபதியின் வீட்டில் கத்தை, கத்தையாக பணம், நகைகளும் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், நீதிபதி வீட்டில் ரூ.11 கோடி பணம் எரிந்து விட்டதாகவும், மேலும் ரூ.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்
திருப்பூர் :
திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)
எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-
மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.
- சிறுவர்களின் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை.
- பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை. அது குற்றச்செயல் இல்லை.
மாணவர்கள் தற்போது ஸ்டைலாக முடிவெட்டி கொள்கிறார்கள். அந்த மாணவர்களை பிடிக்கும் நீங்களெல்லாம் அந்த காலத்தில் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அரசியலமைப்பு சட்டத்தில் 11 கடமைகள் உள்ளன.
- நீதித்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி இணைந்து தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு மற்றும் 'போக்சோ' சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவ கல்லூரியில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் பங்கேற்று தலைமை வகித்தார். அரசு மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் வரவேற்றார்.
இதில் மாவட்ட நீதிபதி பேசியதாவது:- தேசிய அரசியலமைப்பு சட்ட நாளன்று மாணவர்களுடன் உரையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எவ்வளவு உரிமைகள் உள்ளதோ, அதற்கேற்ற கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பு சட்டத்தில் 11 கடமைகள் உள்ளன.
அவற்றில் நான்காவது கடமை என்னவென்றால், தேசத்துக்கு போர், நோய், பஞ்சம் போன்ற அச்சுறுத்தல்கள் வரும் போது மக்கள் ஆகிய நாம், துறை ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கொரோனா நோய் தொற்று காலத்தில், நாங்ளெல்லாம் நலமுடன் இருக்க, 24 மணி நேரமும் ஓய்வின்றி பணி செய்து தங்கள் கடமைகளை சிறப்பாக செய்த மருத்துவ துறையினருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. நீதிமன்றங்களுக்கு வரும் பல குற்ற வழக்குகளில், மருத்துவ துறையின் பங்களிப்பு இன்றியமையாதது. நீதித்துறையும், மருத்துவத்துறையும் இணைந்து செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் 'போக்சோ' சட்டம் குறித்தும், சட்ட உதவி மையம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
- திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
- பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.
இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
- நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும்.
புதுடெல்லி :
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது.
இதில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு கடந்த 2010-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் விடப்பட்டது.
ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட நீதித்துறை செயல்முறைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறை, பணியாளர் நலன், நீதித்துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பித்து உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்து நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதுடன் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.
அதேநேரம் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, செயல்படாத மற்றும் குறைவாகச் செயல்படும் நீதிபதிகள் பணியில் தொடர வழிவகுக்கும்.
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால், ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமை அதிகாரிகளாக அல்லது நீதித்துறை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதை தீர்ப்பாயங்கள் இழக்க நேரிடும். ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கமிஷன்கள் போன்றவற்றில் இதே கோரிக்கையை எழுப்புவதால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிரச்சினையை முழுமையாக ஆராய வேண்டும்.
இவ்வாறு நீதித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- 15 வருடங்கள் வக்கீலாக பணியாற்றினார்.
- 2-வது முறையாக நீதிபதியாகி இருக்கிறார்.
திருவனந்தபுரம் :
அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண் ஆவார்.
கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கிராம பள்ளிக்கூடத்தில் படித்து வந்த இவர் இன்றைக்கு நீதிபதியாக உயர்ந்திருப்பது சுவாரசியமானது.
இவரது தந்தை அங்கே தொழில் அதிபர். அவர் சில வழக்குகளை எதிர்கொண்டபோதுதான், இந்த பெண்ணுக்கு முதன்முதலாக சட்டம் படிக்கும் ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது.
பிலடெல்பியா மாகாணத்தில வளர்ந்த அவர் பென் மாகாண பல்கலைக்கழகத்திலும், டெலவாரே சட்ட கல்லூரியிலும் படித்து வக்கீல் ஆனார். 15 வருடங்கள் வக்கீலாக பணியாற்றினார். 4 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதி ஆனார். இதன்மூலம் அங்கு முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெயரைப் பெற்றார்.
இப்போது தொடர்ந்து 2-வது முறையாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் பென்ட் கவுண்டியில் நீதிபதியாகி இருக்கிறார். இந்த பதவிக்காக நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய இவர், குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ டார்ன்பர்க்கை வீழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார்.
இதன் மூலம் அங்கு இன்னும் 4 ஆண்டுகள் நீதிபதி பதவி வகிப்பார்.
கேரளாவில் தனது கணவரின் சொந்த கிராம வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியாக போர்ட் பென்ட் கவுண்டி நீதிபதியாக அவர் பதவி ஏற்றார்.
இதுபற்றி அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
இந்த முறை நான் என் கணவர் வீட்டில் வைத்து பதவி ஏற்கத்தான் விரும்பினேன். இல்லாவிட்டால் இந்த நிகழ்வில் என் கணவர் குடும்பத்தார் பங்கேற்க முடியாமல் போய் இருக்கும். இந்த பதவி ஏற்பு விழாவில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதுதான் எனது சிறந்த வேலை. அந்த வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன்.
என் கணவர், பெற்றோர் அனைவரும் எனக்கு மகத்தான ஆதரவு தந்து தூண்களாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில் இந்த விழாவில் அவரது பெற்றோரும், மூத்த மகளும் அமெரிக்காவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.
இவரது கணவர் அமெரிக்காவில் தொழில் அதிபராக உள்ளார்.
- மன் பிரீத் மோனிகா சிங், கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார்.
- முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்க வுண்டி சிவில் கோர்ட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இன பெண் நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார்.
அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார். அவர் ஏராளமான வழக்குகளில் வாதாடி உள்ளார். ஹாஸ்டன் நகரில் பிறந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது பெல்லாரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் சீக்கிய பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சீக்கிய மக்களுக்கு இது பெருமையை தரும் என அவர் கூறினார்.
- ஆத்திரம் அடைந்த மைதீன் அப்துல்காதர் ஜெய்லானியை கத்தியால் குத்தினார்.
- கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை பேட்டை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி (வயது 33). இவர் கடந்த 14-6-2015-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நண்பரான யாசர்அராபத் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது டி.வி.யை அதிக அளவு சத்தம் வைத்து பார்த்தாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த மைதீன் என்ற முகமது மைதீன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மைதீன் கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை சராமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 17-6-2015-ம் ஆண்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொலை வழக்கில் கைதான மைதீனுக்கு 15 ஆண்டுகள் 1 மாதம் சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.