என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kannappa Nayanar"
- சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
- திண்ணனார் வில்வித்தையில் பதினாறு ஆண்டுகளுக்குள் சிறந்த பயிற்சி பெற்றார்.
சந்தன மரமும், அகில் மரமும், நல்ல தேக்கு மரமும் பொருந்தி விரைந்து செல்லுகின்ற பொன்முகலியாற்றின் கரையில் உமாதேவியாரோடு மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
அதன் அருகில் உள்ள பொத்தப்பி நாட்டின் தலைநகர் உடுப்பூர், நாகன் அதை ஆண்டு வந்தான். நாகனும், அவன் மனைவி தத்தையும் மகப்பேறின்றி வருந்தினர். முருகப்பெருமானை வழிபட்டனர். ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
திண் என்று இருந்தமையால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். உரிய வயதில் வேட்டைத் தொழிலில் திண்ணன் நல்ல பயிற்சி பெற்றார். திண்ணனார் வில்வித்தையில் பதினாறு ஆண்டுகளுக்குள் சிறந்த பயிற்சி பெற்றார். தந்தை தன் மகனுக்குப் பட்டம் கட்டினார். திண்ணனார் அரசர் ஆனதும் வேட்டையாட சென்றார்.
ஒரு பன்றியைச் துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். அவருடைய தோழர்களாகிய நாணனும் காடனும் உடன் சென்றனர். கடைசியில் பன்றியைக் கொன்றார். பன்றியைத் தூக்கிக் கொண்டு பொன்முகலியாற்றை நோக்கிச் சென்றனர்.
திண்ணனார் மலை மீதுள்ள தேவரை நோக்கினார். அவர் உடம்பில் இருந்து ஏதோ பாரம் குறைவது போன்ற உணர்வு தோன்றியது. பன்றியைச் சுட்டுப்பதம் செய்யுமாறு காடனிடம் சொல்லிவிட்டு நாணனுடன் மலை மீது ஏறினார்.
இறைவனைக் கண்டார், உடல் புளங்காகிதம் அடைந்தது. இறைவனைக் கட்டித் தழுவினார். அய்யோ தனியாக உள்ளீரே என்று வருந்தினார்.
இறைவன் மீதுள்ள நீரும், பூவும் எப்படி வந்தன...? என்று நாணனிடம் கேட்டறிந்தார். தானும் அவ்வாறே செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்.
இவர் கொண்ட முடிவை நாணனும், காடனும் விரைந்து சென்று பெற்றோர்க்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து திருத்த முயன்றும் பயனில்லை.
திண்ணனார் கீழே இறங்கி வந்து பன்றியின் இறைச்சியை தீ அனலில் இட்டு பதப்படுத்தினார். தேக்கிலையில் அதை வைத்துக் கொண்டார்.
திருமஞ்சனத்திற்கு வேண்டிய நீரை வாயில் குடித்து தேக்கி வைத்து கொண்டார்.
பூக்களைத் தலைமுடியில் சொருகிக் கொண்டார். மேலே சென்று லிங்கத்தின் மேலிருந்த பூக்களைத் தன் காலால் அப்புறப்படுத்தினார். வாயில் இருந்த நீரால் அபிஷேகம் செய்தார்.
சுவையான இறைச்சியை ஊட்டினார். விருப்புடன் இறைவனும் உண்டார். இவ்வாறு ஐந்து நாட்கள் பூஜை நடைபெற்றது. திண்ணனார் வேட்டையாட சென்ற சமயத்தில் ஈசனுக்கு பூஜை வைக்கும் சிவச்சாரியார் அங்கு வந்தார்.
இறைவன் மீதுள்ள இறைச்சி துண்டுகளை அப்புறப்படுத்துவார். முறைப்படி வழிபாடு செய்து செல்வார். ஐந்தாம் நாள் இரவில் சிவச்சாரியார் கனவில் இறைவன் தோன்றி திண்ணனாரின் மெய்யன்பினைப் பற்றிக் கூறினார்.
மறுநாள் மறைந்திருந்து பார்க்கும்படி பணித்தார். ஆறாம் நாள் திண்ணனார் வழக்கம்போல் ஊனும், நீரும், மலரும் கொண்டு வந்தார். இறைவன் வலக்கண்ணில் ரத்தம் வழியக்கண்டார். அவர் நெஞ்சம் பதைபதைத்தார்.
ரத்தத்தை துடைத்தார். ரத்தம் நின்றபாடில்லை. பச்சிலையைக் கொண்டு வந்து சாறு பிழிந்து தடவினார். ரத்தம் பெருகிக் கொண்டேயிருந்தது. ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற நியதி அவர் நினைவுக்கு வந்தது.
உடனே தன் கண்ணை அம்பினால் பெயர்த்து எடுத்து சிவபெருமானின் கண்ணில் அப்பினார். என்னே ஆச்சரியம் ரத்தம் நின்றது. மனநிறைவு கொண்டார். மகிழ்ந்தார். சற்று நேரத்திற்குப் பின் இடக்கண்ணில் ரத்தம் பெருகத் தொடங்கியது.
வைத்திய முறை தெரிந்து விட்டபடியால் இப்போது அவர் வருந்தவில்லை. அடையாளம் தெரிவதற்காக இறைவனது இடது கண்ணில் தன் செருப்புக் காலை ஊன்றிக் கொண்டு தன் இடது கண்ணை அம்பினால் பெயர்த்து எடுக்க முயன்றார்.
இறைவன் துணுக்குற்று தமது கையினால் திண்ணனார் கையைப் பிடித்துக் கொண்டு `நில்லு கண்ணப்பா' என்று தடுத்து நிறுத்தினார். ``என் வலது பக்கத்தில் நீ என்றும் நிலைத்திருப்பாயாக'' என அருளினார். இன்றும் திருக்காளத்திக்குச் செல்பவர்கள் கண்ணப்ப நாயனார் உயர்ந்த கற்சிலையாகக் கம்பீரமாய் நிற்பதைக் காணலாம். அன்று முதல் கண்ணப்பர் 63 நாயன்மார்களுள் ஒருவரானார். இவருடைய வரலாற்றை சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்துள் 186 பாடல்களாகப் பாடி மகிழ்ந்துள்ளார்.
- சுவர்ணமுகரி நதி இத்தலத்தில் உத்திரவாகினியாகப் பாய்கின்றது.
- அறுபத்து மூவரில் இறைவனிடம் அன்பு செலுத்துவதில் முதல் நிலையில் நிற்பவர் கண்ணப்பர்.
பஞ்சபூத தலங்களுள் காளஹஸ்தி வாயுத்தலமாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.
ஆதி சேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு பலப் பரீட்சை நடந்தது. மேரு மலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடித்தது. வாயு தன் பலம் கொண்ட மட்டும் காற்றை எழுப்பி மலையை அசைத்தது.
இதனால் அம்மலையின் பிஞ்சுகள் மூன்றாகப் பிய்த்து எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட மலைப் பிஞ்சு ஒன்று இங்கு விழுந்தது. அதுதான் காளத்தி மலையாக உருவாகி இருக்கிறது என்பது ஒரு செவிவழி செய்தி.
வாயுத்தலம் என்று அழைக்கப்படுவதினை உறுதிப்படுத்துவான் போல், இத்திருக்கோயிலின் கருவறைக்குள், சுடர்விட்டுக் கொண்டிருக்கும் விளக்குகளில், இறைவன் முகம் அருகே உள்ள ஒரு விளக்குச் சுடர் மட்டும் காற்றிலே அசைவுற்று கொண்டே இருக்கிறது.
இந்த விளக்குக்கு மட்டும் காற்று எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் கண்டறியாத அதிசயமாகவே இருக்கிறது. இதுதான் வாயுத் தலத்திற்குரிய நிதர்சனமான உண்மையாக கருதப்படுகிறது.
கண்ணப்ப நாயனார்
அறுபத்து மூவரில் இறைவனிடம் அன்பு செலுத்துவதில் முதல் நிலையில் நிற்பவர் கண்ணப்பர். எனவே தான் மணிவாசகப் பெருமான் ``கண்ணப்பன் ஒப்புதோர் அன்பு தம்மிடம் இல்லையே'' என உருகுகிறார்.
மாணிக்கவாசகப் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் போட்டி போட்டுக் கொண்டு பெருமை பாராட்டிய நாயனார் கண்ணப்பர்.
இத்தகைய பேரன்பு எதனையும் எதிர்பாராத அருளன்பு, தெய்வீக அன்பு. எனவே தான் சேக்கிழார் பெருமான் அனைத்து நாயன்மார்களையும் விட உயர்வாக உச்சிமீது வைத்துப் பாடி மகிழ்ந்தார்.
வெண்ணிறத்தோடு பிரகாசிக்கிற சிவலிங்கத்தை வாயுபகவான் பூசித்து அப்பேறு பெற்றான். ஆதலால் இதற்கு வாயுலிங்கம் எனப் பெயர் உண்டாயிற்று.
பிறகு பிரம்மதேவன் அதே லிங்கத்தை ஆராதித்து, பரமசிவனாக்கி, அந்த சிவானந்த நிலையம் எ¢ன்னும் சிரகத்தை பூமியில் கொண்டு வந்து வைத்ததினால் இத்தலம் தட்சண கைலாயம் எனப் பெயர் பெற்றது. இது வாயுலிங்கம் என்பதற்கு அடையாளமாக இச்சன்னதியிலிருந்து திருவிளக்கு எக்காலத்திலும் எந்த வேளையிலும் சதா அசைந்து கொண்டே இருப்பது ஒரு அதிசயம்.
சுவர்ணமுகரி நதி இத்தலத்தில் உத்திரவாகினியாகப் பாய்கின்றது. இதற்கு வியத்கங்கா, சர்வலோக தீர்த்த சேஷயா, அவிட்ட சின்தையா, பவானி, ஜெகத்தாத்திரி, பவித்திரீ, கிருதகின்முகா, சிவானந்த கரி, வேகவதி, யசல்ஹினி, வக்கிரஹ, கனநாதினி, பக்தபாச மூலநிகுர்தனி, மனோக்கிய சிக்கா என இருபத்தைந்து பெயர்கள் உண்டு.
கூர்மையான லிங்கம்
இப்பெருமான் சிவலிங்கத்தில் ஒரு புதிய உருவை ஏற்றிருக்கின்ற அற்புதக் கோலத்தைக் கண்டு வணங்கி மகிழலாம். நான்கடி உயரம். அடியில் பெருத்து; முடியில் கத்தி முனை போன்று கூர்மையாக ஒடுங்கிய நிலையில் உள்ள மூர்த்தி.
மாலை போட்டு அலங்கரிக்க என்று ஒரு தனிச் சட்டம். அதை விலக்கி விட்டு அர்ச்சகர் தீபாராதனை பண்ணினால், சிலந்தி, நாகம், யானைக் கொம்புகளோடு கண்ணப்பனது ஒரு கண்ணும் லிங்கத் திருவுருவில் தெரியும். அந்தராளயத்திலே கூப்பிய கையானாய் வில்லத்தை தாங்கிக் கொண்டு கண்ணப்பரும் சிலை உருவில் நிற்பதைக் கண்டு மகிழலாம்.
காளத்தி நாதரை வணங்கி மீண்டும் வலப்பக்கச் சுற்றில் திரும்பினால் கிழக்கு நோக்கியபடி ஞானப் பூங்கோதையின் கோயில் உள்ளது. கம்பீரமான தெய்வம் இது இங்கு பல சுற்றுக்கள் உள்ளன.
நகரத்தார் திருப்பணி
தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகப் போற்றி மகிழும் நகரத்தார் பெரு வணிகர்களில் ஒருவரான தேவகோட்டை மே.அருநா.ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் காளத்தி நாதர் திருக்கோயிலைப் பழுது பார்த்துப் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளனர். இவரது திருவுருவச் சிலை பொன்முகலி ஆற்றுக்குச் செல்லும் படிக்கட்டின் பக்கத்திலே ஒரு சிறு மண்டபத்திலே நின்ற நிலையில் இருப்பதையும் பார்க்கலாம்.
மணிகர்ணிகா கட்டம்
கோயிலின் பின்புறத்தில் இரண்டு குன்றுகள் உள்ளன. ஒன்றில் பேரிலே கண்ணப்பர் தொழுத இறைவனான குடுமித் தேவர் உள்ளார். மற்றொன்றில் துர்க்கையம்மை அருளாட்சி புரிவதை பார்க்கலாம்.
கண்ணப்பர் மலை ஏறும் மலைச்சரிவிலே மணிகண்டேசுவருக்கு ஒரு திருக்கோயில். அதை அடுத்து மலையைக் குடைந்து உண்டாக்கிய மண்டபம். இதற்கு மணிகர்ணிகா கட்டம் என்று பெயர்.
அந்திமத் தசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்துக்கு கொண்டு வந்து, வலப்பக்கமாக ஒருக்கச் சாய்த்துக் கிடத்தினால், சாகிற பொழுது உடல் திரும்பி, வலது காது வழியாக உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் என்கின்றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்