search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanyakumari Port"

    கன்னியாகுமரி மாவட்டத்தில், மத்திய அரசு அமைக்கும் வர்த்தக துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1886 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்துக்கும், கீழமணக்குடிக்கும் இடையே சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதற்கு அந்த பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் இணைந்து நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக எம்.எல்.ஏ.க்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் முற்றுகை போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.

    தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்துவோம் என எம்.எல்.ஏ.க்களும், போராட்டக்காரர்களும் தெரிவித்தனர். அதன்படி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் நேற்று காலை வாகனங்களில் புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் நாகர்கோவிலுக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.


    போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மீனவர்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, மேலமணக்குடி, கீழ மணக்குடி, சங்குத்துறை கடற்கரை, ஆரோக்கியபுரம், புதுக்கிராமம், குளச்சல் சைமன்காலனி, குறும்பனை, ராஜாக்கமங்கலம் துறை, நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி என 10 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

    மேலும் போலீசாரின் தடையை மீறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தொண்டர்களுடன் வந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    மீனவர்களின் மறியல் போராட்டம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முற்றுகை தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 1886 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 887 பேர் பெண்கள்.

    இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341 (சட்டத்திற்கு கட்டுப்படாமல் இருத்தல்), 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 188 (பொதுப்பணியில் உள்ள அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    ×