search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanyakumari tirupati venkatajalapathi temple"

    • சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது.
    • வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை இன்னும் சிறப்புடையதாக உள்ளது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதியை திருப்பதி சென்று முறைப்படி வழிபாடு செய்து அருள் பெற்றவர் நாரத மகரிஷி, தான் பெற்ற பலனை ஒரு ஏழைக் குயவனுக்கு அடைய வழிகாட்டினார்.


    திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான். பீமன் என்ற அவன் உடல் ஊனமுற்றவன். அவன் தினமும் மண்பாண்டங்களைச் செய்துவிற்று பிழைப்பு நடத்தி வந்தான். மண்ணினால் மலர்களைச் செய்து அம்மலர்களால் ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமானை அர்ச்சனை செய்து வந்தான்.

    ஒருநாள் அவனது கனவில் நாரத மகரிஷி தோன்றினார். புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வெங்கடாஜலபதியை வழிபடும் முறையை உபதேசித்தார். மலை மீது ஏற முடியாத பீமய்யா தனது குடிசையிலேயே வழிபாடு நடத்த முடிவு செய்தான்.

    மண்ணால் வெங்கடா ஜலபதியின் உருவத்தை செய்தான். மண்ணாலே மலர்கள் செய்து புரட்டாசி சனிக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபாடு செய்தான். முறைப்படி விரதத்தைக் கடைப்பிடித்தான்.

    அதே சமயத்தில் நாட்டை ஆண்ட அரசர் தொண்டமான் சக்கரவர்த்தி தங்க மலர்களால் சீனிவாசனைப் பூஜை செய்து வந்தான். ஒருநாள் பொன்னாலான மலர்களால் அர்ச்சனை செய்தபோது அவை மண் மலர்களாகி விழுவதைப் பார்த்தான் அதிர்ச்சி அடைந்து பயந்து கண் கலங்கினான்.

    ஒருநாள் நள்ளிரவில் ஏழுமலையான் அரசனின் கனவில் வந்து அரசே! அருகில் வசிக்கும் பீமன் என்ற குயவன் என்னைத் தினமும் பக்தியுடன் மண் மலர்களால் பூஜை செய்கிறான். ஆகையால் நீ பூஜைக்குப் பயன்படுத்தும் பொன்மலர்கள் மண் மலர்களாக மாறி விடுகின்றன என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் காலை இந்த உண்மையை அறியத் தொண்டமான் புறப்பட்டு சென்றான். ஒரு குடிசையில் மண்ணினால் செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடாஜலபதியின் சிலைக்கு எதிரில் மெய்மறந்த நிலையில் மண் பூக்களால் அர்ச்சனை செய்யும் பீமனை கண்டான்.

    குயவனுக்கு அரசன் உதவி செய்தான். சில காலம் கழிந்த பின்னர் பீமன், புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்ததன் காரணமாக மோட்ச உலகை அடைந்தான்.

    தொண்டமான் இவ்வரலாற்றை அர்ச்சகர்களுக்குச் சொல்லி சீனிவாசனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண் பாண்டங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த பழக்கம் இன்று வரை கோவிலில் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை மாதம் 11-ந்தேதி நடத்த தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.47 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், கோவில் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது.

    அதைதொடர்ந்து கோவில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    மேலும், திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம், உள்ளிட்ட பல விழாக்கள் அதே நாட்களில் இங்கும் நடக்கும். கோவிலின் கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர தேரோடும் 4 மாட வீதி கட்டும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், மூடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம், கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, இணைப்பு சாலைகள், அலங்கார தோரண நுழைவு வாயில், கோ சாலை, தெப்பக்குளம் போன்றவை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    கருவறையில் அமைக்கப்பட உள்ள 6½ அடி உயர ஏழுமலையான் சிலை, 3½ அடி உயர பத்மாவதி சிலை, 3½ அடி உயர ஆண்டாள் சிலை, 3½ அடி உயர கருட பகவான் சிலை ஆகிய 4 சிலைகள் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான சிற்பகலை கல்லூரியில் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. தற்போது, வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து கோவில் கட்டுமான பணியை திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான போலா பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி, கண்காணிப்பு பொறியாளர் ராமுலு, செயற்பொறியாளர் சத்திய நாராயணா, துணை செயற்பொறியாளர் சந்திரமவுளி ரெட்டி, ஸ்தபதி முனிசாமி ரெட்டி, உதவி பொறியாளர் அமர்நாத் ரெட்டி, திட்ட பொறியாளர் அப்சாராவ், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் அனுமந்தராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆய்வுக்கு பின் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூடத்தில் அடுத்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடிக்க உத்தரவிட்டப்பட்டது. அதைதொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. 
    ×