search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karnataka speaker"

    • யு.டிகாதர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
    • சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்தவர் சபாநாயகர் பதவி ஏற்று இருப்பது கர்நாடக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

    பெங்களூரு :

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.

    இதில் காங்கிரஸ் 135 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். இதுதவிர 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றுள்ளனர். கடந்த 20-ந் தேதி முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றார். பின்னர் அவரது தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவுக்காகவும், புதிய சபாநாயகரை தேர்வு செய்யவும் 3 நாட்கள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி, கடந்த 22-ந் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது. தற்காலிக சபாநாயகராக தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த 22-ந் தேதியும், நேற்று முன்தினமும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, நேற்று புதிய சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று தற்காலிக சபாநாயகர் அறிவித்திருந்தார். புதிய சபாநாயகர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் மட்டும் நேற்று முன்தினம் சட்டசபை செயலர் விசாலாட்சியிடம் மனு அளித்திருந்தார்.

    பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் யு.டி.காதர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவது உறுதியானது. காங்கிரசின் மூத்த தலைவர்கள் யாரும் சபாநாயகர் பதவியை ஏற்க முன்வராததால், யு.டி.காதரிடம் தலைவர்கள் சமாதான பேச்சு நடத்தி சம்மதம் தெரிவிக்க வைத்திருந்தனர். புதிய சபாநாயகர் தேர்வையொட்டி விதானசவுதாவில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடைபெற்றது.

    இதில், சபாநாயகராக யு.டி.காதரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் முழு ஆதரவு அளித்திருந்தனர். அதைத்தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் தேஷ்பாண்டே முன்னிலையில் நேற்று காலை 11 மணியளவில் 3-வது நாள் சிறப்பு கூட்டம் தொடங்கியது. அப்போது சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளதாக தேஷ்பாண்டே அனுமதி வழங்கினார். அந்த சந்தர்ப்பத்தில் யு.டி.காதர் தவிர யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், அவரை போட்டியின்றி தேர்வு செய்ய ஆதரவு அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

    இதனை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஆதரித்தார். அதைத்தொடர்ந்து, 16-வது சட்டசபையின் புதிய சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் யு.டி.காதரை முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    அந்த சந்தர்ப்பத்தில் தற்காலிக சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்த தேஷ்பாண்டே, யு.டி.காதரை அமர வைத்தார். புதிய சபாநாயகருக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், 'புதிய சபாநாயகர் யு.டி.காதருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர், இந்த பொறுப்பை மிக சிறப்பாக நிர்வகிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் மிகுந்த அமைதி, பொறுமை உடையவர். சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான தகுதிகள் அனைத்தும் யு.டி.காதருக்கு உள்ளது.

    சபையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய சபாநாயகராக பதவி ஏற்றிருக்கும் யு.டி.காதருக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் அரசு செய்து கொடுக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

    அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், 'கர்நாடக சட்டசபைக்கென தனிச்சிறப்புகள் இருக்கிறது. இதுபோன்ற சிறப்புகளை கொண்ட சட்டசபையின் சபாநாயகராக நீங்கள் (யு.டி.காதர்) பதவி ஏற்று இருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு 20 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது. மந்திரி, எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளீர்கள்.

    இதற்கு முன்பு சபாநாயகராக இருந்தவர்கள், இந்த பதவிக்கு மிகுந்த கவுரவம் கொடுத்துள்ளனர். நீங்கள் வழங்கும் தீர்ப்பு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் இருக்க வேண்டும். சபாநாயகர் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு கூட செல்கிறார்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பு ஆளும், எதிர்க்கட்சிக்கு சமமாக இருக்க வேண்டும். தற்போது புதிய எம்.எல்.ஏ.க்கள் பலர் சபைக்கு வந்துள்ளனர். அவர்கள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

    இதுபோல், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்கள். மேலும் சட்டசபையில் நடக்கும் விவாதங்கள் காகிதங்களில் இருப்பதால், அது அழிந்துவிட வாய்ப்புள்ளது. தற்போது தொழில்நுட்ப வசதி அதிகரித்து விட்டது. எனவே சபையில் நடக்கும் நிகழ்வுகளை காகிதங்கள் இல்லாமல், தொழில்நுட்பத்துடன் இணைத்து மாற்ற வேண்டும் என்று முன்னாள் மந்திரி டி.பி.ஜெயசந்திரா கூறினார். அதற்கு சபாநாயகர் யு.டி.காதரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    புதிய சபாநாயகராக பதவி ஏற்றுள்ள யு.டி.காதர் 5-வது முறையாக எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். ஏற்கனவே 2 முறை மந்திரி, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். இந்த முறையும் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு, சபாநாயகர் பதவி கிடைத்துள்ளது. யு.டிகாதர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒருவர் சபாநாயகர் பதவி ஏற்று இருப்பது கர்நாடக வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக சட்டசபை புதிய சபாநாயகர் யு.டி.காதரின் வாழ்க்கை குறிப்பு பற்றிய விவரம் வருமாறு:-

    யு.டி.காதர் அரசியல் பின்னணியில் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். யு.டி.பரீத் மற்றும் நசீமா பரீத் தம்பதியின் மகனாக கடந்த 1969-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி பிறந்தார். பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படித்துள்ளார். யு.டி.காதரின் தந்தை யு.டி.பரீத் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2007-ம் ஆண்டு இருந்தார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் யு.டி.காதர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு, 2008-2013-2018-2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை மற்றும் உணவுத்துறை மந்திரியாகவும், கடந்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நகர வளர்ச்சித்துறை மந்திரியாகவும், அதன்பிறகு, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராகவும் யு.டி.காதர் இருந்திருந்தார். மிகவும் எளிமையானவர் ஆவார். மங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நேரங்களில் காரில் இருந்து இறங்கி சென்று, போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்த பெருமையும் யு.டி.காதருக்கு உள்ளது. தற்போது சபாநாயகராக அவர் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக மாநிலத்தில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்திக்க அவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பதிவாளரை சந்திக்க அனுமதி கிடைத்தது. பதிவாளிடம் மனுவை அளித்து, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker 
    ×