search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmir Governor"

    ஜம்மு-காஷ்மீரில் கூடுதலாக துணை ராணுவப் படைகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பரவிவரும் சில வதந்திகள் தொடர்பாக அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் இன்று விளக்கம் அளித்துள்ளார். #KashmirGovernor #Additionalforces
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை நடத்துகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.



    இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த படைப்பிரிவின் பெரும் பகுதியினர் இங்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி பிரிவினைவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

    இந்நிலையில், ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் இன்று உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்க்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்களின்போது கூடுதலாக 400 கம்பனி துணை ராணுவப் படைகள் இங்கு வந்ததால்தான் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் 13 கட்டங்களாக தேர்தல்களை நடத்த முடிந்தது.

    இப்போது 100 கம்பெனி படைகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மேலும் பல கம்பெனி படைகள் இங்கு வரவுள்ளன. எனவே, வதந்திகளை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    எங்களது சண்டை காஷ்மீருக்கானது, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என சமீபத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதை இங்குள்ள மக்கள் கவனிக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவின் தவிர்க்க முடியாதவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். #KashmirGovernor #Additionalforces
    வன்முறையாளர்கள், வதந்திகளை பரப்புபவர்கள், பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல், கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    ஜம்மு:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து, ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். #KashmirGovernor #SatyaPalMalik #strictaction #actionwithoutmercy #PulwamaAttack
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்ய கவர்னர் பரிந்துரைத்துள்ளார். #Kashmirlocalbodypolls
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அங்கு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் காலியாக உள்ள சுமார் 34 ஆயிரம் உள்ளாட்சி பதவி இடங்கள் நிரப்பப்படும்.

    காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியம் உள்ளதால் பாதுகாப்பு கருதி 4 கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளனர். முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதி நடத்தப்படும். இரண்டாவது கட்ட தேர்தல் 10-ந்தேதி, மூன்றாவது கட்ட தேர்தல் 13-ந்தேதி, நான்காவது கட்ட தேர்தல் 16-ந்தேதி நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை 20-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் 17 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட முதலில் காங்கிரஸ் தயங்கியது. தற்போது போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.


    இதனால் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேட்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் காப்பீடு செய்ய காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் பரிந்துரைத்துள்ளார். அனைத்து வேட்பாளர்களும் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என்று அவர் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

    என்றாலும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் அறிவித்துள்ளன. கவர்னரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. #Kashmirlocalbodypolls #JKGovernor #satyapalmalik
    ×