search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kasi viswanathar temple trichy"

    திருச்சியில் உள்ள புத்தூரில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர். இறைவியின் திருநாமம் காசி விசாலாட்சி.
    தமது தேவைகளை தீர்க்கும் பொருட்டு இறைவன் மற்றும் இறைவியிடம் வேண்டிக்கொள்வது மனிதர்களின் இயல்பு. தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின் இறைவன் இறைவிக்கு அபிஷேகமோ அல்லது ஆராதனையோ செய்து நன்றிக் கடனை நிறைவேற்றுவதும் பக்தர்களின் வழக்கம்.

    ஆனால், தாங்கள் வேண்டிக் கொள்ளும்போதே, அதாவது நன்றிக் கடனை முன்னதாகவே பெண்கள் செலுத்தும் ஆலயம் ஒன்று உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

    ஆம்... திருச்சியில் உள்ள புத்தூரில் உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர். இறைவியின் திருநாமம் காசி விசாலாட்சி.

    ஆலயம் ஊரின் நடுவே அமைந்திருக்க நான்கு புறமும் வீதிகள். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்திற்கு கிழக்கு, தெற்கு என இருபுறமும் வாசல்கள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். நந்திதேவன் தனி மண்டபத்தில் அமர்ந்திருக்க, அடுத்து உள்ளது மகா மண்டபம்.

    அந்த மகாமண்டபத்தின் வலதுபுறம் நின்ற கோலத்தில் அன்னை விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறாள். அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாசலின் இடதுபுறம் விநாயகர் மற்றும் ஆதிலிங்கேஸ்வரர் திருமேனிகளும், வலது புறம் பாலமுருகன் திருமேனியும் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார்.

    பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த புராதன ஆலயம், அழகுற சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் திருமதிற் சுவற்றுடன் அழகுற விளங்குகின்றது.

    இங்குள்ள இறைவனின் திருவுருவம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்கள் சொல்கின்றனர்.

    தெற்கு வாசலைக் கடந்தால் அங்கேயும் நந்தியும் பலி பீடமும் உள்ளன. இறைவனின் கருவறை கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை அம்மனும் அருள் பாலிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் விநாயகர், மேற்குப் பிரகாரத்தில் நாகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள்.

    வடக்குப் பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் சூரியன், சனி பகவான், பைரவர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி உள்ளது.

    காசி விசுவநாதர், விசாலாட்சி அம்மன்

    நவராத்திரியின் 10 நாட்களும் இங்கு கொலு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோஷம், வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி, ஆடி வெள்ளி நாட்கள், ஆடிபூரம், தை பூசம், சித்திரை மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, பங்குனி முதல் நாள், மாத கார்த்திகை நாட்கள், சஷ்டி தை வெள்ளி நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் போன்றவை நடைபெறுகின்றன. சித்திரா பவுர்ணமி, விஜயதசமி, தை பூசம், நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன் இறைவி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருவதுண்டு. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடை பெறும் அன்னாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தடைபட்ட திருமணம் நடந்தேற பிரார்த்தனை செய்து கொள்பவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவிக்கு சேலை வாங்கி சாற்றி வழிபட்டு நன்றிக் கடனை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    இங்கு அருள்பாலிக்கும் இறைவி அருள்மிகு விசாலாட்சி அம்மன் கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

    திருமணத்திற்கு காத்து நிற்கும் பெண்கள் தங்களது மனதிற்குப் பிடித்த மணாளன் அமைய வேண்டுமென அன்னையிடம் மன முருக வேண்டிக் கொள்கின்றனர். அத்துடன், மாங்கல்யம் செய்து அதை இறைவியின் கழுத்தில் முன்னதாக நன்றி கடனாக அணிவித்து தங்களது பிரார்த்தனைக்கு முழு வடிவம் கொடுக்கின்றனர்.

    அவர்களது பிரார்த்தனை நிறைவேறுவது கண்கூடான நிஜம் என்று சிலிர்ப்போடு கூறுகின்றனர் பக்தர்கள்.

    திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில்இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். உறையூர் வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் இந்த ஆலயம் வழியே செல்லும்.
    ×