search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavandachipudur Panchayat"

    • கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை.
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2¾ கோடி நிதி உள்ளது. அந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நிர்வாக அனுமதிக்காக நிதியை விடுவிக்க கோரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு (கிராம ஊராட்சி) பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உரிய அனுமதியளிக்கப்படவில்லை.

    இதையடுத்து கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் நேற்று மதியம் முதல் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் ரூ.2.75 கோடி வளர்ச்சி நிதிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்துக்கு எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை. எனவே அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒன்றிய அலுவலக மேலாளர், கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என தெரிவித்தார். இதை பஞ்சாயத்து தலைவி செல்வி ரமேஷ் ஏற்கவில்லை.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நேற்றிரவும் அவர் தாராபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்வி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    ×