search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Police station"

    கேரளாவில் போலீஸ் நிலையம் மீது குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி கேரளாவை சேர்ந்த கனகதுர்க்கா (வயது 44), பிந்து (42) ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் சபரிமலை கர்மசமிதி அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு போலீஸ் நிலையம் மீதும் ஒரு கும்பல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் துப்புதுலக்கியபோது போலீஸ் நிலையம் மீது குண்டு வீசிய 10 பேர் கும்பல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பிரவீன், ஸ்ரீஜித், அபிஜித் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் தம்பானூர் ரெயில்நிலையத்தில் வைத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீஜித், அபிஜித் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களை நெடுமங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×