search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata Commissioner"

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MamataDharna #CBI #CBIvsMamata #KolkataCommissioner
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கமிஷனருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.



    இந்நிலையில், இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவி கண்ணா, தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த மோசடியில் மூத்த அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    ‘மேற்கு வங்க அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. ராஜீவ் குமாருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி,  மோசடி தொடர்பான ஆதாரங்களை குற்றவாளிகளிடமே கொடுத்துள்ளார். மேலும் வழக்கு தொடர்பான நிறைய விவரங்கள் காணாமல் போய் விட்டன’ என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

    ஆனால், நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்று மேற்கு வங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கு வங்க தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  #MamataDharna #CBI #CBIvsMamata #KolkataCommissioner

    ×