search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kootu kudumbam"

    குடும்பம் என்பது அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.
    சமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா? அல்லது தனி குடித்தனமா? என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட்டு குடும்பம்தான்! நான், எனது மனைவி மற்றும் என் குழந்தையுடன் கூட்டாக வசிக்கிறோம்’ என்று வேடிக்கையாக சொல்கிறார்.

    இது சிரிப்புக்காக என்றாலும் நாம் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே மறந்து விட்டோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் சற்று கனக்கத்தான் செய்கிறது.

    சமீபகாலங்களில் மணவிலக்குகள் அதிகரித்துள்ளன. குடும்பநல நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. மனம் பொருந்தாதவர்கள் நித்தம் நித்தம் சித்ரவதை அடைவதைவிட பிரிந்துச் செல்வது சிறந்தது. அது அவர்களது உரிமை. ஆனால், 90 சதவீதத்தினர் மிக அற்பக் காரியங்களுக்காக பிரிய முயல்வது வருத்தத்தை அளிக்கிறது.

    தனது பெற்றோர் வீட்டுக்கு போவதா அல்லது சினிமாவுக்கு செல்வதா என்கிற பிரச்சினையின் தொடர்ச்சி சண்டையில் முடிந்து கணவனும் மனைவியும் விலக்குக் கேட்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கூறினார்.

    இந்த கூட்டுக் குடும்ப வாழ்வினைத் துறந்ததால் நாம் தொலைத்தது அன்பு, பாசம், அரவணைப்பு, அறிவுரைகள், வழிக்காட்டுதல் இன்னும் ஏராளம் உண்டு. இதில் பெருநஷ்டம் அடைந்தது குழந்தைகள்.

    நண்பர் ஒருவரின் மகன், மகள் இருவரும் 90-களில் அமெரிக்கா சென்றவர்கள். நண்பரும் அவரது மனைவியும் சென்னையில் வாழ்கின்றனர். மக்களுக்கு திருமணமாகி பேரக் குழந்தைகள் என்று குடும்பம் பெருகினாலும், இங்கு சென்னையில் தாத்தாவும் பாட்டியும் தனிமையில் வாழ்கின்றனர்.

    சில காலங்கள் முன்புவரை இவர்கள் ஒரு ஆண்டு செல்வார்கள், பிறகு அவர்கள் வருவார்கள். காலம் செல்லசெல்ல அவர்கள் வருவதும் குறைந்தது. இவர்கள் செல்வதற்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. பேரக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டனர். தாத்தா பாட்டி அன்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டார்கள்.

    இவர்களுக்கு எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாத மனநிலை. ஒருவேளை அன்றைக்கு தம்மக்களை அமெரிக்கா செல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தி தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணித்தது தவறோ என்று அவர்களை நினைக்க வைத்தது.



    இங்கு இந்தியாவிலேயே வாழ்பவர்கள் நிலை மட்டும் போற்றத்தக்க வகையில் உள்ளதா? என்றால், அதுவும் இல்லை.

    பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள், அத்தை மகள், மாமன் மகன் என்று உற்றார், உறவினரோடு விளையாடி மகிழ்ந்த காலம் போய், இன்று பெற்றவர்கள் முகத்தை மட்டும், அதுவும் அரிதாக, பார்த்து வளரும் குழந்தைகளை தான் அதிகம் பார்க்கின்றோம். இதில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை அமைந்தால், குழந்தைகள் ‘திரைக்கடலில்’ மூழ்கி விடுகிறார்கள். அது தொலைக்காட்சி திரையாகவும் இருக்கலாம் அல்லது கைபேசிகளின் திரையாகவும் இருக்கலாம்.

    சமீபத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சி முடிவுப்படி புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், கதைகள் கேட்டு வளர்வதின் மூலமாகவும் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் அறிவுத்திறன் தொலைக்காட்சி, வலைக்காட்சி இவைகளைப் பார்ப்பதின் மூலம் கிடைப்பதில்லை என்பதே.

    பாட்டி வடை சுட்ட கதை, தொப்பிக்காரன் குரங்குகளிடம் தொப்பி தொலைத்தக் கதை, ராஜா-ராணி கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று நாம் நமது தாத்தா பாட்டிகளிடம் கற்ற கதைகளை நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லத் தவறிவிட்டோமா? என்கிற தவிப்பு உள்ளது.

    கதை மூலம் கற்பிப்பது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும். அவர்களது கற்பனைத் திறனை விரிவடையச் செய்யும். மூளைக்கு சிறந்த பயிற்சியாக அமையும். அது மட்டுமின்றி கதைகள் வாயிலாக நன்னெறியையும், தன்னம்பிக்கையும் ஊட்ட முடியும். இன்று பாடங்களில் முதல் மதிப்பெண் வாங்குபவர்கள் கூட ஒரு சிறு தோல்வி வந்தால் துவண்டு விடுகிறார்கள். மனமுடைந்து தற்கொலை வரை செல்வதற்கு காரணம் தன்னம்பிக்கை குறைவதும், எதிர்மறையான எண்ணங்கள் எழுவதும்தான். தத்தம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள உறவுகள் அருகாமையில் இல்லாமால் போவதும் முக்கியக்காரணம்.

    தாத்தா பாட்டிகள் கதை மட்டும் சொல்பவர்கள் அல்ல. நமது பண்பாடு, நாகரிகம், அடையாளம் மற்றும் உயர்ந்த எண்ணங்கள் என்று எல்லாவற்றையும் கற்றுத் தருபவர்கள். அதுவும் உணர்வுடன் கற்றுத்தருபவர்கள். தங்கள் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்வதின் மூலமாக பெரும் மகிழ்ச்சியும், சாதனை உணர்வும் தாத்தா பாட்டிகளுக்கு கிடைக்கும்.

    குடும்பம் என்பது கணவன், மனைவி குழுந்தைகள் கொண்ட வெறும் தொகுப்பு அல்ல. அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்து தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தலும், அன்பு, பாசம், சோகம், துயரம் இவற்றை பங்குப்போட்டுக் கொள்ளுதலும், இணக்கமாக வாழுதலும் தான்.

    இன்றைய பொருள் தேடும் உலகில் பெற்றோருக்கும் நேரமின்மை; அதிக மதிப்பெண்கள் தேடி குழந்தைகளும் ஓட்டத்துக்கு இடையில் குடும்ப உறவை பலப்படுத்த ஒரே வழி இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரைமணி நேரம் ஒதுக்கி, அன்றைக்கு நடந்த செய்திகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடவேண்டும்.

    ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை தொழில், குடும்பம், சமூகம், தனக்கு என்று பகுத்து திட்டமிட்டு பயன்படுத்தினால் குடும்பம் ஏற்றம் பெறும், நாடு செழிக்கும், மனிதகுலம் தழைக்கும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா கட்டும்.

    இன்று (மே 15-ந்தேதி) உலக குடும்ப தினம்.

    கமலேஷ் சுப்பிரமணியன், எழுத்தாளர்
    ×