search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KRS"

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. #Cauvery #KRS #KabiniDam
    மண்டியா:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), மைசூருவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு சுமார் ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தமிழ்நாடு மேட்டூரில் உள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.




    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த வண்ணம் இருந்தது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வந்தது. நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 122.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,135 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 5,009 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.

    அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,541 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்தது. அந்த சமயத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 16,200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 21,209 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 25,595 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #Cauvery #KRS #KabiniDam
    ×