search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kurangu neer veezhchi"

    திருப்பூர், கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூரில் திடீரென மேகம் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    இந்த மழை இரவு 7 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. இதே போல் தாராபுரம், காங்கயம், மூலனூர், அவினாசி, பல்லடம், உடுமலை பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை நீடித்தது.

    திருப்பூரில் பெய்த மழை காரணமாக அங்குள்ள ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், அவினாசி சாலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    அவினாசி - 10.6, திருப்பூர் -28, பல்லடம் -17, தாராபுரம்-16, காங்கயம் -4, மூலனூர் -21, உடுமலை பேட்டை - 5.40.

    கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. கோவை நகரில் லேசான மழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. வால்பாறை சத்தி எஸ்டேட் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பொள்ளாச்சியிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை நீடித்தது. அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.

    மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
    ×