search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kutka seized"

    சேலம் கருப்பூர் டோல்கேட்டில் 300 கிலோ எடை கொண்ட 25 மூட்டை குட்காவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் குட்கா, பான்பராக் உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்திற்கு ஓசூர் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் எல்லை பகுதியான ஓசூர் முதல் சேலம் வரை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் சேலம் கருப்பூர் டோல்கேட்டில் இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 25 மூட்டைகளில் 300 கிலோ எடை கொண்ட குட்கா உள்பட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து காரை ஓட்டி வந்த மைசூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த அருண் (25) மற்றும் காரில் இருந்த மைசூர் விஜயாநகரை சேர்ந்த பிரசாந்த் (28) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மைசூரில் இருந்து இந்த குட்கா பொருட்களை சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு எடுத்து செல்வதாகவும், அங்கிருந்து வேறு எங்கு எடுத்து செல்வது என்று பின்னர் தெரிவிப்பதாகவும், தங்களை அனுப்பியவர்கள் கூறியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் வாகனம் மற்றும் 300 கிலோ எடை கொண்ட அந்த 25 மூட்டை குட்காவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த குட்கா மூட்டையை அனுப்பியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×