என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "leaders Consultation"
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.1 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த வாக்குகளை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எண்ணி முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை எதிர்க்கட்சிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்றும் ஆலோசித்து வந்தன. கருத்துக் கணிப்புகள் வந்ததும் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டது.
என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில் ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் அவர் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
நேற்று மீண்டும் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் அடுத்தடுத்த முயற்சி காரணமாக நேற்று சோனியாவை மாயாவதி சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். ஆனால் கருத்துக் கணிப்பு முடிவைத் தொடர்ந்து மாயாவதி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். அவர் நேற்று அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இன்று மதியம் தொடங்கி பிற்பகல் வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. எனவே இன்றையக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சில கோரிக்கைகளில் பிடிவாதமாக உள்ளன.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஏதாவது 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் எண்ணி சரி பார்க்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது, மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளிலும், ஒப்புகை சீட்டு எந்திரங்களிலும் குளறுபடி இருப்பது தெரிய வந்தால் அந்த தொகுதியில் முழுமையாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதை வலியுறுத்தி 21 கட்சித் தலைவர்களும் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனு கொடுக்க உள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க செல்லும் குழுவில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, அகமது படேல், ஆம்ஆத்மி சார்பில் சஞ்சய்சிங், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஸ்ரா, தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓபிரைன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளததாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் பேச முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்