search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leaders greeting சுதந்திர தினம் 2018"

    இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #IndependenceDay
    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

    இந்திய நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் வாழ்க்கைச் சுமை அதிகரித்த வண்ணம் உள்ளன. இவையெல்லாம் வருங்காலத்தில் மாற்றம் அடைந்து ஒரு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகி அமைதியும், முன்னேற்றமும் அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழி வகுக்கக்கட்டும் என தே.மு.தி.க. சார்பில் எனது இனிய சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்:-

    இந்தியாவின் 72-வது விடுதலை தினத்தை நாளைக் கொண்டாடும் தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சீரழிக்கும் சக்திகளாக மதுவும், புகையும் மாறி வருகின்றன. இவற்றை உயிர்க்கொல்லிகளாக பார்த்து தடை செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இவற்றை வருவாய் ஆதாரங்களாகப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

    நடத்துவதோ சாத்தியமல்ல. இந்த அரசை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன் காக்கும் அரசை அமைப்பதன் மூலமாக மட்டுமே சமத்துவமான, ஊழல் இல்லாத, மது மற்றும் புகையற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். எனவே. அந்த இலக்கை நோக்கி முன்னேற இந்தியாவின் விடுதலை நாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    நம் சுதந்திர தேசம் எட்டவேண்டிய உயரத்தையும், இலக்கையும் அடைய விடாமலும், தேசத்தின் முன்னேற்றத்தை முடக்க முனையும் தீமைகள் மற்றும் தடைகளாக திகழும் பிரிவினைவாதம், வன்முறை, ஆதிக்க மனப்பான்மை, பொருளாதார ஏற்ற தாழ்வு என அனைத்திற்கும் விடைகொடுத்து, பரிபூரண சுதந்திரத்தை கருத்தாகவும், நாம் காணும் காட்சியாகவும், அனைத்து நிலைகளிலும் அமைத்திடுவோம்.

    நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்விற்கும், அரசும், பொது மக்களும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக மேற்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டு வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த முன்வர வேண்டும்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:-

    பல கனவுகளோடும், கற்பனைகளோடும் விலை மதிப்பற்ற பல்லாயிரக்கணக்கான இன்னுயிர்களை ஈந்து பெற்ற இவ்விடுதலை நன்நாளில், அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

    இந்தியாவை காப்பாற்ற, இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்று, வெறியூட்டுகிற தீய சக்திகளிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும், அரசியல் சட்ட அடிப்படைகளையும் காப்பாற்ற சங்கற்பம் மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, சாதி, மத, பாலின பேதமில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தியாகிகளின் கனவை நனவாக்க இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

    சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் போராடி விடுதலை பெற்றோம். கருத்துரிமை எங்கள் பிறப்புரிமை என்று உரத்து முழங்க வேண்டிய காலமிது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கருத்துரிமை காத்து நிற்க இந்த சுதந்திரத் திருநாளில் உறுதியேற்போம்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    வறுமையையும், ஊழலையும் ஒழிக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இந்த இரு தீமைகளும் ஒழிக்கப்படும் நாளில் தான் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு முன்னேற முடியும். எனவே, வறுமையையும், ஊழலையும் வளர்த்தெடுக்கும் பினாமி ஊழல் அரசை அகற்றி, நல்லாட்சி அமையும் நாள் தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை நாள் ஆகும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்காக கடுமையாக உழைக்கவும் இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா:-

    சோதனைகளை கடந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தின் நற்பலன் சென்றடைய அனைவரும் பாடுபட இந்த சிறப்பான நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக. கருத்துச் சுதந்திரம், சுற்றுச்சூழல் தூய்மையை காக்கும் சுதந்திரம், பெரும் முதலாளித்துவ வணிக அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் முதலியவற்றை அனைத்து மக்களும் அனுபவிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் அரசமைப்புச் சட்டம் காட்டும் வழியில் சளைக்காமல் உழைக்க இந்த திருநாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    நாடு முழுவதும் அமைதி நிலவ ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் சாதி, மத, இன, மொழி பேதம் உள்ளிட்ட வேற்றுமைகளை களைந்து புதிய சமத்துவ சமுதாயம் உருவாக உழைப்போம். இந்த இனிய சுதந்திர திருநாளில் உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்த குமார், கார்த்தி சிதம்பரம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், கோகுலம் மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், வி.ஜி.சந்தோ‌ஷம், ஜனதா தளம் மாநில தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #IndependenceDay
    ×