search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "levelling corruption"

    அரசியல் ஆதாயத்துக்காக மோடி மீது ராகுல் காந்தி ஊழல் புகார் சொல்வதாக நிதின் கட்காரி குற்றம் சாட்டினார். #NitinGadkari #RahulGandhi #Modi
    நாக்பூர்:

    அரசியல் ஆதாயத்துக்காக மோடி மீது ராகுல் காந்தி ஊழல் புகார் சொல்வதாக நிதின் கட்காரி குற்றம் சாட்டினார். ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான நிதின் கட்காரி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடியை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் விதம் நல்லதல்ல. அரசியல் ஆதாயத்துக்காக மோடிக்கு எதிராக அவர் ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார்.



    பிரதமர், ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. நாட்டுக்கே சொந்தமானவர். எனவே, பிரதமரை மதித்து அங்கீகரிக்க வேண்டிய கடமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, மோடிக்கு எதிராக மோசமான வார்த்தைகளை ராகுல் பயன்படுத்தி வருகிறார்.

    ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது, வெறும் கவர்ச்சி கோஷம். ஏழைகளிடம் ஓட்டு வாங்குவதற்கான அரசியல் வியூகம். இத்திட்டத்தை அமல்படுத்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படும். இவ்வளவு பணம் எங்கிருந்து வரும்?

    ஒருவேளை, இதற்காக இவ்வளவு பணத்தை பயன்படுத்தினாலும், விவசாயம் போன்ற இதர துறைகளுக்கான பணத்துக்கு என்ன செய்வது? அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை பின்பற்றுவது பொருளாதாரத்தை பாதிக்கும். காங்கிரசின் நம்பகத்தன்மையும் சரிந்து விடும்.

    இப்போதைய தேவை, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நல்ல கொள்கைகளை வகுப்பதுதான். அதுபோல், வளர்ச்சி விகிதத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயரச்செய்ய வேண்டும். ‘வறுமையை ஒழிப்போம்’ என்று 1947-ம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ் கட்சி கோஷம் எழுப்பி வருகிறது. பின்னர், 40 அம்ச திட்டம், 20 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று போட்டார்கள். ஆனால், எதுவும் பயன்படவில்லை.

    மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் திகழ்பவர்கள்.

    ஊடகம், கார்ப்பரேட், சினிமா தொழில் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வயது வரம்பு உள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் விஷயத்தில் கட்சி ஒரு முடிவு எடுத்துள்ளது.

    எதிர் கருத்து கொண்டவர்களை தேச விரோதிகளாக பா.ஜனதா கருதுவது இல்லை என்று அத்வானி கூறியிருப்பது கட்சியின் கருத்துதான். நாங்கள் எல்லோரும் அத்வானியுடன் உடன்படுகிறோம். மோடியும் உடன்படுகிறார். ஆனால், சிலர் அத்வானி கூறியதை தவறாக மேற்கோள்காட்டி பேசுவது முற்றிலும் தவறானது.

    நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில்தான், எங்கள் அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அது பலன் அளிக்க சிறிது காலதாமதம் ஆகும். இருப்பினும் வலிமையான பலன்களை அளிக்கும். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

    எல்லா தொழில்களும் ஒரு வட்டம் போன்றதுதான். உயர்வு, தாழ்வு இருக்கும்.

    தேர்தல் காலத்தில் விவாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், தேச பாதுகாப்பு என்பது விவாதத்துக்கு உரிய விஷயம் அல்ல. காங்கிரஸ் கட்சியோ, தேச பாதுகாப்பை அரசியல் ஆக்கி வருகிறது. 21-ம் நூற்றாண்டின் முக்கிய கொள்கை, முன்னேற்றமும், வளர்ச்சியுமாக இருக்கும். இந்த தேர்தலில், பா.ஜனதா நியாயமான, நல்ல பெரும்பான்மை பெறும். மோடிதான் எங்களின் அடுத்த பிரதமர்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். #NitinGadkari #RahulGandhi #Modi
    ×