search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lingam"

    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம்.
    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன்.

    பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.

    தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.

    அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும்.

    ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும்.
    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். சகல மங்களங்களும் உண்டாகும்.

    ஸ்ரீகணேஸாயநம:
    1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
    நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
    ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
    காமதஹம்கருணாகர லிங்கம்I
    ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
    புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
    ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
    பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
    தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    5: குங்குமசந்தனலேபித லிங்கம்
    பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
    ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
    பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
    தினகரகோடிப்ரபாகர லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
    ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
    அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
    ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
    பராத்பரம் பரமாத்மக லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

    பொருள்:

    ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
    ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII

    மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன்,
    எவர் படிப்பாரோ... அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.
    ×