search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "localbodyelections"

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் 14-வது நிதி கமி‌ஷன் விதிகள்படி இந்த பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார். #localbodyelections #TNgovernment

    சென்னை:

    நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சி பணிகளுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கி வருகிறது.

    அடிப்படை நிதி உதவி, செயல்பாட்டு நிதி உதவி என்று 2 பிரிவாக இந்த நிதி வழங்கப்படும். அடிப்படை நிதி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கீடாக தரப்படும். செயல்பாட்டு நிதி என்பது முந்தைய ஆண்டில் செயல்பட்ட விதத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்படும்.

    ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் தான் இந்த நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது 14-வது நிதி கமி‌ஷனின் விதிகள் ஆகும்.

    ஆனால், தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை. எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய பஞ்சாயத்து நிதியை மத்திய அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

    கடந்த ஆண்டு 2-வது தவணையாக அடிப்படை நிதியாக ரூ.1390 கோடியும் செயல்பாட்டு நிதியாக ரூ. 560 கோடியும் தர வேண்டும். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இதுவரை அந்த பணத்தை தரவில்லை.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான முதல் தவணை ரூ.1608 கோடி தர வேண்டும். அதில், ரூ. 758 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக அ.தி.மு.க. எம்.பி. செந்தில்நாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து பதில் அளித்த மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் ரூ. 758 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார்.


    இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு 2-வது தவணை தொகையில் ரூ. 1950 கோடியும், இந்த ஆண்டு முதல் தவணையில் ரூ.850 கோடியும் வரவேண்டி உள்ளது. கிட்டத்தட்ட ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் வரவேண்டியது நிறுத்தப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் 14-வது நிதி கமி‌ஷன் விதிகள்படி இந்த பணத்தை அனுப்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இந்த நிதியை பெறுவதற்கான வேறு வழியே இல்லை என்றும் மாநில அதிகாரிகளும் தெரிவித்தனர்.

    சமீபத்தில் மத்திய பஞ்சாயத்துராஜ் மந்திரி புருஷோத்தம் ரூபலாவை சந்தித்த தமிழக அமைச்சர் வேலுமணியும், தமிழகத்துக்கு பஞ்சாயத்து நிதி ஒதுக்காதது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்துக்கு நிதி ஒதுக்காவிட்டால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    எதிர்க்கட்சிகள் இந்த வி‌ஷயத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்ப வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, பேசிய அ.தி.மு.க. பாராளுமன்ற தலைவர் வேணுகோபாலும் இதை சுட்டிக்காட்டி பேசி உடனடியாக நிதியை தர வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

    ×