search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love opposition"

    திருவள்ளூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கத்தியால் குத்திக்கொன்ற மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #StudentArrested
    சென்னை:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவைச் சேர்ந்தவர் திருமுருகநாதன் (வயது 52). இவருடைய மனைவி பானுமதி (50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி (26), தேவிபிரியா (19) என 2 மகள்கள் உள்ளனர்.

    திருமுருகநாதன், மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தேவிபிரியா, திருவள்ளூரை அடுத்த இந்து கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    தேவிபிரியா, கடந்த 7 மாதங்களாக ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (20) என்பவரை காதலித்து வந்தார். சுரேஷ், தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். காதலர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் அறிந்த தேவிபிரியாவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘படிக்கும் வயதில் காதலா?’ என மகளை கண்டித்தனர். ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, தனது காதலை தேவிபிரியா தொடர்ந்து வந்தார். இதற்காக தனது பெற்றோருடன் அவர் தகராறிலும் ஈடுபட்டார்.

    இதையடுத்து தனது காதலனிடம் பேசிய தேவிபிரியா, பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தன்னை வந்து அழைத்துச்செல்லும்படி சுரேசிடம் கூறினார். அதற்கு அவர், ‘தன்னால் தற்போது வரமுடியாது. எனது நண்பர்களான கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரைச் சேர்ந்த 18 வயது வாலிபர்கள் 2 பேரை அனுப்பி, உன்னை அழைத்துவர ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

    அதன்படி நேற்று சுரேசின் நண்பர்கள் இருவரும் ரெயில் மூலம் திருவள்ளூர் வந்து, அங்கிருந்து தேவிபிரியா வீட்டுக்கு சென்றனர். திருமுருகநாதன் வழக்கம்போல காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். சாமுண்டீஸ்வரி வேலைக்கு செல்லாததால் வீட்டின் உள் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். பானுமதி மற்றொரு அறையில் இருந்தார்.

    அப்போது தேவிபிரியா, வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் நைசாக தனது துணிமணிகளுடன் காதலன் சுரேசின் நண்பர்களுடன் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது தனது தேவைக்காக வீட்டில் இருந்த நகைகளை ஒரு பையில் எடுத்து வைக்க முயன்றார். இதை கண்ட அவரது தாயார் பானுமதி அதிர்ச்சி அடைந்தார். மகளை அவர் கடுமையாக கண்டித்தார். இதனால் தாய்-மகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த தேவிபிரியா, வீட்டில் காய்கறி வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து, பெற்ற தாய் என்றும் பாராமல் பானுமதியின் வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அவர் சத்தம் போடாமல் இருக்க சுரேசின் நண்பர்கள் இருவரும் பானுமதியின் வாயை பொத்திக்கொண்டனர்.

    படுகாயம் அடைந்த பானுமதி அலறினார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த சாமுண்டீஸ்வரி எழுந்து ஓடி வந்தார். அதற்குள் சுரேசின் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுமதியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவிபிரியா எதுவும் தெரியாததுபோல் கூட்டத்தோடு கூட்டமாக அவர்களுடன் சென்றார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பானுமதி, சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையில் வீட்டில் இருந்து தப்பி ஓடிய சுரேசின் நண்பர்கள், காக்களூர் பகுதியில் வழி தெரியாமல் அங்கு இருந்த சில வாலிபர்களிடம் வழிகேட்டனர். ஆனால் அவர்களின் சட்டையில் ரத்தக்கறை படிந்து இருப்பதை கண்ட அவர்கள் சந்தேகம் அடைந்து 2 பேரையும் பிடித்து வைத்துக்கொண்டு திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் பானுமதியை தேவிபிரியாவே குத்திக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து டி.எஸ்.பி. கங்காதரன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, அரிதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தேவிபிரியா மற்றும் காதலனின் நண்பர்கள் 2 பேர் என 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தேவிபிரியாவின் காதலனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #StudentArrested
    ×