என் மலர்
நீங்கள் தேடியது "LS Polls"
- பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
- கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.
சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.
மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.
LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
- உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்
- இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாத வகையில் செயல்பட்டு வருகிறோம்
வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களை நடத்தி பா.ஜனதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதை நிதிஷ் குமார் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 65 இடங்களில் போட்டியிடுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார். கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிட இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியால் முன்னதாகவும், இனிமேலும் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடையாது.
கட்சியில் உள்ள தலைவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது உங்கள் முன் சொல்லிக் கொள்கிறேன்'' என தெரிவித்தார்.
இதனால் உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு போதுமான இடங்களை பகிர்ந்து அளித்து போட்டியிட வாய்ப்புள்ளது.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை, இரண்டு மக்களவை இடங்கள் ஒதுக்கீடு.
- மற்ற இரு கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரளாவில் பிரனராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும் என அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் தலைவருமான வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்கள் கேட்ட நிலையில், இரண்டு இடங்கள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம், பொன்னாணி ஆகிய இடங்களில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா காங்கிரஸ் (ஜே) கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி கோட்டயம் தொகுதியில் போட்டியிடும் எனவும், கொல்லம் தொகுதியில ஆர்எஸ்பி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என சதீசன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அடுத்த முறை காலியாகும் மாநிலங்களவை எம்.பி. தொகுதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போது வயநாட்டில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் நிற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
- தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல்.
- மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறது.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அதற்கான விதிகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, விண்ணப்பிப்பதற்கான இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளது.
சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள், 3 மாதம் ஆகிய நிலையில் தற்போது அமல்படுத்துவது ஏன்? என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தலுக்காக இதை கொண்டு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளன.
இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜனதாவின் மோசமான வாக்கு வங்கி அரசியல் எனத் தெரிவித்துள்ளார்.3
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
சிஏஏ என்றால் என்ன? வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்து குடியேறி, அவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதனுடைய அர்த்தம் அதிகப்படியான சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதுதான். அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். அவர்களுக்காக வீடுகள் கட்டி கொடுக்கப்படும். பா.ஜனதாவால் நம்முடைய குழந்தைகளுக்கு வேலை வழங்க முடியாது.
ஆனால், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் குழந்தைகளுக்கு வேலை வழங்க விரும்புகிறார்கள். நம்முடைய ஏராளமான மக்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் இருந்து இங்கே வந்தவர்களுக்கு பா.ஜனதா வீடுகள் வழங்க விரும்புகிறது. நம்முடைய வேலை வாய்ப்பை அவர்களுடைய குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியா வந்து குடியேறிவர்களை நமது உரிமையான வீடுகள் குடியமர்த்த விரும்புகிறார்கள்.
நமது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இந்திய அரசின் பணம் பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு பயன்படுத்தப்படும்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் இருந்து, அந்த நாடுகளில் சிறுபான்மையினராக கருதப்படும் நபர்கள் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் வந்து தங்கியுள்ளனர். இங்கு வந்து குடியேறிவர்களுக்கு வீடுகள் வழங்கவும், வேலைவாய்ப்புக்காகவும் நம்முடைய மக்கள் பணத்தை செலவழிக்க பா.ஜனதா விரும்புகிறது.
வரும் தேர்தலில் இந்த மூன்று நாடுகளில் இருந்து இந்தியா வந்து குடியேறிவர்கள், வாக்கு வங்கியாக மாறுவதால் பா.ஜனதாவுக்கு ஆதாயம் கிடைக்கும். தேர்தல் வரும் நிலையில் சிஏஏ-வை அமல்படுத்தியது மோசமான வாக்கு வங்கி அரசியல். மொத்த நாடும் சிஏஏ சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறது. சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால், மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
நாட்டின் ஒடுத்த மொத்த மக்களும் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என விரும்புகிறார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு எதிரான அவர்களது கோபத்தை மக்களவை தேர்தலில் அதற்கு எதிராக வாக்களித்து வெளிப்படுத்த வேணடும்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பா.ஜனதா இந்த முறை 370 பிடித்தாக வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து தேர்தல் களப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது கடந்த 2019 தேர்தலில் பெற்ற எண்ணிக்கையை விட 67 அதிகமாகும்.
இலக்கு மிகப்பெரியது என்பதால் ஒவ்வொரு வேட்பாளர்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறது. களத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, ஏற்கனவே எம்.பி.யாக இருந்தால் தொகுதியில் அவருக்கு எதிரான அலை குறித்து கவனமாக ஆராய்ந்து அதன்பின் இடம் வழங்குகிறது.
பா.ஜனதா இதுவரை இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. தற்போது வரை 270 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் ஏற்கனவே போட்டியிட்ட 33 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்று 72 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏறக்குறைய பாதி அளவிற்கு, அதாவது 30 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இரண்டு பட்டியல்களை சேர்த்து 21 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் பிரக்யா தாகூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
140 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஹர்ஷ் மல்ஹோத்ரா தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.
டெல்லியில் மட்டும் தற்போது எம்.பி.யாக இருக்கும் 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனோஜ் திவாரிக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 20 பேரில் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 எம்.பி.களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் ஏழு எம்.பி.க்களில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய மந்திரி தர்ஷனா ஜர்தோஷ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதாவில் வெற்றி பெற முடியவில்லை.
- நாகாலாந்தில் இரண்டு தொகுதிகளிலும் என்பிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது இல்லை என பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேகாலயாவில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் சம்பித் பத்ரா எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தலின்படி, இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு மேகாலயாவில் உள்ள இரண்டு இடங்களிலும், மணிப்பூரில் ஒரு இடத்திலும் பா.ஜனதா போட்டியிட்டது. ஆனால் மூன்று இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.
மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட அரசியல் விளைவு, பா.ஜனதாவை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் மூன்று மாநிலங்களிலும் ஆதரவு அளிக்கும் இடங்களில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கட்சிகள் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு அடிக்கடி ஆதரவு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி தொகுதியில் கே. கோபிநாத் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 46 பேர் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்
2. கிருஷ்ணகிரி- கே. கோபிநாத்
3. கரூர்- ஜோதிமணி
4. கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத்
5. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்

6. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
7. கன்னியாகுமரி- விஜய் வசந்த்.
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
- நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே, சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
அதன்படி, சஹாரன்பூரில் மஜித் அலி, கைரானாவில் ஸ்ரீபால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி, பிஜ்னூரில் விஜயேந்திர சிங், நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.
ராம்பூரில் இருந்து ஜிஷான் கான், சம்பாலில் இருந்து ஷவுலத் அலி, அம்ரோஹாவில் இருந்து மொஸாஹித் ஹுசைன், மீரட்டில் இருந்து தேவ்ரத் தியாகி மற்றும் பாக்பத்தில் இருந்து பிரவீன் பன்சால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
கட்சி வேட்பாளராக கவுதம் புத்த நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கியும், புலந்த்ஷாஹர் (எஸ்சி) தொகுதியில் கிரீஷ் சந்திர ஜாதவ், அயோன்லா தொகுதியில் அபித் அலி, பிலிபிட்டில் அனிஸ் அகமது கான் என்ற பூல் பாபு, ஷாஜஹான்பூரில் தோதாரம் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- பா.ஜனதா நேற்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் நவீன் ஜிண்டால் பெயர் இடம் பெற்றிருந்தது.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் உடனடியாக பா.ஜனதா வாய்ப்பு வழங்கியுள்ளது.
2024 மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டி.வி. தொடரில் ராமர் வேடத்தில் நடித்துள்ள அருண் கோவில் (Arun Govil), தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார். பா.ஜனதாவில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவீன் ஜிண்டாலுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "உங்களுக்கு ராட்சத அளவிலான வாஷிங் மெஷின் தேவைப்படும்போது, இது (ஜிண்டால் பாஜக-வில் இணைந்தது) நிகழத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்கு ஒரு பங்களிப்பை கூட வழங்காத நிலையில், நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் எனச் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ஜிண்டால் மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வந்தார். இது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜனதா தனது கட்சியில் இணைத்துக் கொள்ளும்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து வாய் திறப்பதில்லை என அடிக்கடி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
நவீன் ஜிண்டால் இரண்டு முறை குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- டி.ஆர். பாலு 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- ஆறு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 82 வயதாகும் டி.ஆர். பாலு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் டி.ஆர். பாலு உறுதிமொழி எங்கிருக்கிறது என்பதை சிறிது நேரம் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மேலும், தேர்தல் அதிகாரி உதவியாளரை அழைத்து உறுதிமொழி இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு சைகை காட்டினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட டி.ஆர். பாலு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் டி.ஆர். பாலு உறுதிமொழியை வாசிக்க திணறியது ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணைய தளத்தில் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன்னிடம் கையிருப்பாக ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 1.08 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், 16 கோடி ரூபாய் அளவில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டி.ஆர். பாலு 1996-ல் இருந்து 2004 வரை நான்கு முறை தென்சென்னை தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்றார். 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019-ல் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1986 முதல் 1992 வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2003 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் மத்திய மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உத்தர பிரதேச மாநிலத்தில் 2014-ல் 71 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியிருந்தது.
- 2019-ல் 7 இடங்களை குறைந்து 64 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது.
பிரதமர் மோடி மக்களவை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை ஐந்து கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், வருகிற 30-ந்தேதி வேட்மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும்.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 31-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பாராளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
மீரட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மீரட் தொகுதியில் ராமாயணம் டிவி தொடரில் நடித்த அருண் கோவில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பா.ஜனதா 370 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு தேர்தலை சந்திக்கிறது. உத்தர பிரதேசத்தின் மேற்கு பிராந்தியங்களில் பா.ஜனதா 2014-ல் 27 இடங்களில் 24-ல் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த 2019-ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து 8 இடங்களை கைப்பற்றியது.
பா.ஜனதாவுக்கு 19 இடங்களே கிடைத்தது. இதனால் இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.
2019-ல் ராஜேந்திர அகர்வால் நிறுத்தப்பட்டிருந்தார். இவர் சமாஜ்வாடி ஆதரவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஹஜி யாகூப் குரேசியை சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வீழ்த்தியிருந்தார். இதனால் தற்போது பா.ஜனதா வேட்பாளரை மாற்றியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 2014-ல் 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2019-ல் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியால் 64 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சமாஜ்வாடி கட்சி ஐந்து இடங்களை தாண்ட முடியவில்லை.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது.
சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் களம் இறங்குகிறது. பகுஜன் சமாஜ் கட்சி தனியாக நிற்கிறது. பா.ஜனதா ஆர்.எல்.டி., எஸ்.பி.எஸ்.பி., அப்னா தளம் (எஸ்), நிஷாத் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி முதற்கட்டமாகவும், மேலும் 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்டமாகவும், 10 தொகுதிகளுக்கு மே 7-ந்தேதி 3-வது கட்டமாகவும், 13 தொகுதிளுக்கு மே 13-ந்தேதி 4-வது கட்டமாகவும், 14 தொகுதிகளுக்கு மே 20-ந்தேதி 5-வது கட்டமாகவும், மேலும் 14 தொகுதிகளுக்கு மே 25-ந்தேதி 6-வது கட்டமாகவும், 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
- ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
- போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:-
பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நன்றாக சந்தித்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று ஒருவேளை இல்லை என பதில் அளித்தேன். போட்டியிடுதவற்கான பணம் இல்லை. எனக்கும் ஆந்திராவா? அல்லது தமிழ்நாடா? என்ற பிரச்சனை உள்ளது.
நீங்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களா? இந்த மதத்தில் இருந்து வந்தவரா? இங்கிருந்து வந்தீர்களா? போன்ற வெற்றிக்கான அளவுகோல்களின் கேள்வியாக இருக்கும். இதையெல்லாம் செய்ய நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை.
என்னுடைய வாதத்தை ஏற்றுக்கொண்டதற்காக நான் நன்றியுள்ளவராக உள்ளேன். ஆகவே, நான் போட்டியிடவில்லை." என்றார்.
நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.