search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maa Madurai Vizha"

    • நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம்.
    • புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் மா மதுரை விழா வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரையில் நடக்கிறது.

    இந்த விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

    பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம்.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.

    "தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்" என்று மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது.

    நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம்.

    திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி.

    புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது.

    அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாபாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.

    புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.

    1866-ம் ஆண்டே நகராட்சியான ஊர் இது.

    சென்னைக்கு அடுத்ததாக 2-வது மாநகராட்சியாக 1971-ம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி.

    அண்ணல் காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.

    ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்!

    இந்த ஆண்டு மதுரை போற்றும் விழாவை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லும் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. அமைப்புடன் இணைந்து உள்ள இளையோர் அமைப்பான "யங் இந்தியன்ஸ்" அமைப்பை பாராட்டுகிறேன். ஊரைப் போற்றும் இளைஞர்களாக நீங்கள் வளர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தரவேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும்!

    இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும். சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும்.

    மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இதுபோன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கீதா, மாமதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம், பைசல் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×