என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras High Court"

    • உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    உதகை மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    அதன்படி உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் வார நாட்களில் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    மருத்துவ சேவை, சரக்கு வாகங்கள் மற்றும் உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
    • டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.

    சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

    அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.

    எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.

    • வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

    அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    விசாரணையின்போது சி.வி. சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி.சண்முகம் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதுபோன்ற கருத்துகளை பேசுவதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டுமென நீதிபதி கூறினார்.

    எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.

    • அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
    • குரங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன? என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

    சென்னை:

    கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

    அப்போது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

    கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன? என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமானது எனவும், இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என வேதனை தெரிவித்தார்.

    • தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. தமிழகத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 (பழைய அபராதம் ரூ.100), செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2,500, வாகனம் உரிமம் தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அதுதெரிந்தே அவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன்மூலம் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது.
    • தமிழ்நாட்டில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், மீனவர் தந்தை செல்வ ராஜ்குமார் மீனவர் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழ்நாட்டில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

    • ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை
    • மாநில காவல்துறையை நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது என மனுதாரர் கூறி உள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.

    இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • வழக்கில் இருந்து விடுதலை ஆனவர்கள் சிலைகள் மீது உரிமை கோர முடியாது.
    • குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிமை கோரினால், நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

    சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். அந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கோவில் நிர்வாகம் தரப்பில் உடனடியாக புகார் அளிக்கப்படவில்லை என்பதற்காக சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விடக்கூடாது என்றும், வழக்கில் தொடர்புடைய சிலைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் தொன்மை வாய்ந்தவை என தொல்லியல்துறை சான்றளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த கீழ்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசில் அளித்த தகவலின்பேரில் வெளிநாடுகளில் இருந்து 91 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கீழ் நீதிமன்றம் மேம்போக்காக விசாரித்து அனைவரையும் விடுதலை செய்துள்ளது என்று கூறினார்.

    அதேபோல, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் தமது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கீழ்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை.

    அதேநேரம், விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என்பதற்காக, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிமை கோர முடியாது. மீட்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட கோவில் அல்லது அரசு அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

    ஒருவேளை இந்த பொருட்களுக்கு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தரப்பில் உரிமை கோரினால், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். எழும்பூர் நீதிமன்றம் இவர்கள் மீதான பழைய வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
    • ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? 

    அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.

    தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டெண்டர் ஒதுக்குவது தொடர்பான கொள்கை முடிவில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என வாதம்
    • மலிவான விளம்பரத்திற்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை பதிவிட்டிருந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.

    அவர் தனது மனுவில், அறப்போர் இயக்கத்தின் செயல் தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்ததாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும், தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தன்னைப்பற்றி பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும், 1.10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, எந்த அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது கொள்கை முடிவு, அதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார்.

    டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் சார்பில் யாரும் டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக எந்த வழக்கும் தொடரவில்லை. புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மலிவான விளம்பரத்திற்காகவும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், தங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்றும், அறப்போர் இயக்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதன்படி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

    மேலும், டெண்டர் முறைகேடு புகாரில் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம் 

    • தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
    • தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் இருந்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 2.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அவர் 30.6.2012 அன்று ஓய்வுபெறும் வயதை அடைந்துள்ளார்.

    தனது பணி ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார்.

    ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க அரசு மறுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அந்த தொழிலாளிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை 2020-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

    மேலும், கண்ணனுக்கான ஓய்வூதிய பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அடிப்படையே இல்லாமல் தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, ஒரு துப்புரவு தொழிலாளர் தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கு ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார்.

    தேவையில்லாமல் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தையும் அந்த துப்புரவு பணியாளரையும் மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல முற்படுகின்றனர் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

    இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  

    ×