search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Shivratri festival"

    • புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும்.
    • மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜை செய்து சிவனை வழிபட்டுள்ளனர்.

    சித்தூர்:

    சித்தூர் மாவட்டம் நகரி தொகுதிக்கு உட்பட்ட கீழப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அதையொட்டி 6 கால அபிஷேகமும் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலில் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தம் என 2 தீர்த்தங்கள் உள்ளன. அதில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

     இந்த கோவிலுக்கு மடாதிபதிகள் பலர் வந்து தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளனர். அதேபோல் காஞ்சி மகா பெரியவர் எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலுக்கு வந்து பல மாதங்கள் தங்கி பூஜைகள் செய்து சிவனை வழிபட்டுள்ளார்.

     இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் கரும்புகளால் அமைக்கப்பட்ட லிங்கம், வில்வக்காய்களால் உருவாக்கப்பட்ட லிங்கம், விபூதியால் செய்யப்படட லிங்கம், சந்தனத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், பனை ஓலைகளில் அமைக்கப்பட்ட லிங்கம், பசு சாணத்தால் உருவாக்கப்பட்ட லிங்கம், ஐந்து லட்சம் ருத்ராட்சங்களால் அமைக்கப்பட்ட லிங்கம் எனப் பல்வேறு லிங்க அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வந்தன.

     இந்த மகாசிவராத்திரி விழாவையொட்டி 10 அடி உயரத்தில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட லிங்கம் மற்றும் 9 அடி உயரத்தில் ருத்ராட்சங்கள், துளசி மணி, தாமரை மணிகளால் செய்யப்பட்ட ஏகபாத மூர்த்தி உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரியான நாளை ஏகபாத மூர்த்திக்கு 6 கால பூஜையும், உமா மகேஸ்வரன் திருக்கல்யாண வைபவமும் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணியில் இருந்து இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சாமி தரிசனம் செய்ய தரிசன வரிசை வழியாக கோவிலுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 35 பெருநகரங்களில் மகாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு.
    • சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

    சென்னை:

    திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் வருகிற 8-ந் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உள்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் மகாசிவ ராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    8-ந்தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ் விழா ஒளிபரப்பு செய்யப் படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

    கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னி லையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    சங்கர் மகாதேவன், குரு தாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பி ரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது.

    இது தொடர்பாக பி.வி.ஆர். ஐநாக்ஸ் நிறுவனத் தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், ``மகா சிவராத்திரி விழா என்பது பாரத பாரம்பரியத்தில் ஈடு இணையற்ற ஆன்மீக முக்கி யத்துவம் வாய்ந்த விழாவாகும்.

    இத்தகைய சிறப்பு மிக்க இவ்விழாவை ஈஷா வுடன் இணைந்து முதல் முறையாக வெள்ளித் திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பக்தர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறலாம்" என தெரி வித்துள்ளார்.

    இவ்விழாவில் பங்கேற்ப தற்கான டிக்கெட்டுகளை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஈஷா மகாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய நிகழ்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    • பரமத்தி அங்காளம்மன் கோவிலில் மாசி மகா சிவாரத்தி விழா, ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஆண்டும் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி மாலை காப்பு கட்டு நிகழ்ச்சியும், 17-ந் தேதி மொகமிட்ட கொப்பரை பூஜையும், 18-ந் தேதி இரவு மகா சிவராத்திரி அபிஷேகம், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அங்காளம்மன் கோவிலில் மாசி மகா சிவாரத்தி விழா, ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி மாலை காப்பு கட்டு நிகழ்ச்சியும், 17-ந் தேதி மொகமிட்ட கொப்பரை பூஜையும், 18-ந் தேதி இரவு மகா சிவராத்திரி அபிஷேகம், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.

    19-ந் தேதி அதிகாலை கரகம் பாவித்து சுமார் 5 கிலோ எடையுள்ள 3 அடி நீளமுள்ள கத்தியை கரகத்தில் நிற்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை குடிபாட்டு மக்களும், பக்தர்களும் கண்டு வழிபட்டு சென்றனர். பின்னர் அழகு தரிசனம் நடைபெற்றது. இதில் 14 சமுதாய குளிப்பாட்டு மக்கள், கோவில் பூசாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று இரவு பிள்ளைப்பாவை நிகழ்ச்சியும், இன்று மாலை 5 மணிக்கு மேல் மயான கொள்ளை மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை 6 மணிக்கு மேல் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கால சாந்தி பூஜை, 11 மணிக்கு உச்சி கால பூஜை, மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதியம் 2 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, மகா யாக பூஜை, மாலை 3.30 மணிக்கு மகா பிரதோஷ அபிஷேகம், 5.30 மணிக்கு தீபாராதனை, 6 மணிக்கு சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். இதேபோல் ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலி சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது
    • விழா ஏற்பாடுகளை கோவில் கட்டுமான திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் 25 வது வார்டு, திருவள்ளுவர் நகர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முதல் கால பூஜை இரவு 8 மணிக்கு தொடங்கியது. அபிஷேக ஆராதனை, அலங்கார ஆராதனை 9 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி அபிஷேக அலங்கார ஆராதனையுடன் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மூன்றாம் கால பூஜை அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெற்றது. நான்காம் கால பூஜை 5 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கட்டுமான திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    • இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.

    கடலூர்:

    திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதை யொட்டி மூலவர், அம்பாள் மற்றும் பிரகார லிங்க திருமேனிக்கு 108 மூலிகை திரவியங்களால் 4 கால மகா அபிஷேகம் நடந்தது. சரக்கொன்றை நாதருக்கு சப்தநதி, பஞ்சகங்கை புண்ணிய தீர்த்தங்களால் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    திருநாவுக்கரசு திரு தொண்டு அடியார்கள் கூட்டம் சார்பில் இரவு முழு வதும் சொற்பொழிவு, பரத நாட்டியம், தேவாரம், திருவாசகம், இசைப்பா டல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.இன்று அதிகாலை 5.30 மணிக்கு அதி உன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது.விழா வுக்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் மகாதேவி, சிவாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.
    • 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். இங்கு கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .

    இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற சுமார் 90 வயது பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இதற்கு முன்பு, வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.

    தொடர்ந்து முத்தம்மாள் பாட்டி கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார். இதில் 40 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து பின்னர் வெறும் கையில் அப்பம் சுடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை பெண்கள் நேர்த்தி கடனாக தயார் செய்து கொடுக்கின்றனர்.

    கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காகவும், மகா சிவராத்திரி வழிபாடு செய்வதற்காகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். 

    • பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
    • அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை ஆகியன நடை பெற உள்ளது.

    பேரூர்,

    கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது.

    இந்து அறநிலையத் துறை இந்த ஆண்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 5 சிவாலயங்களில் சிவராத்திரியை சிறப்பு பூஜைகளுடன், விடியவிடிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாட உத்தர விட்டுள்ளது.

    நாளை இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் ஒரு மணி வரை இரண்டாம் கால பூஜை. நள்ளிரவு ஒரு மணி முதல் 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை ஆகியன நடை பெற உள்ளது.

    சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு திருக்கோவில் நாதஸ்வர கலைஞர்க ளின் மங்கள இசை, தவில் இசை, நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது. மாலை 6.15மணிக்கு கோவை மாவட்ட திருக்கோவில் ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு குத்துவிளக்கேற்றி விழா தொடங்குகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாலச் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோர் ஆன்மிக அருளுரை வழங்குகின்றனர்.

    இரவு 7.15 மணிக்கு வழுவூர் பழனியப்பன் குழுவினர் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7.45 சிவகண வாத்திய குழுவினர் கயிலை வாத்தியமும் நடைபெற உள்ளது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொ றிவாளர் சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் பெண்களா, ஆண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் கானா உலகநாதன், தஞ்சை நாட்டுப்புற பாடகி செல்வி, டி.வி.சண்முகம் வழங்கும் கோவை பிரியா இசைக்குழு பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. இரவு 11.30 நண்பர்கள் கலைக்குழு ஸ்ரீதர் தலைமையில் வெங்கலம், பம்பை, காவடி, கைசிலம் பாட்ட கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இரவு 12.30 மணிக்கு சென்னை சாய் நிருத்தியா லயா வழங்கும் அரணும் அங்கையர்கன்னியும் நாட்டிய நாடகம், அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சுசித்ரா குழுவின் பக்தி இன்னிசை, இரவு 2.30 மணிக்கு திருப்பூர் மூலனூர் சாந்தக்குமாரின் மின்னல் கிராமியக் கலைக் குழு பறை இசை, தீ விளையாட்டு,

    அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை சூப்பர் சிங்கர் ராஜ கணபதி, சரத் சந்தோஷ், தீப்தி சுரேஷ், ஸ்ரீஷா பாட்டுக்கச்சேரி ஆகியன பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

    சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் 2 ஹர்சினி, உதவி ஆணையர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மற்ற 4 கோவில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மகா சிவராத்திரி விழாக்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை அதிகாரிகள் செலவழிக்கக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் 5 பெரு நகரங்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விழாவை நடத்துவதற்காக செல்லும் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விமான பயணக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே மற்ற 4 கோவில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கோவில்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகையை அநாவசியமாக செலவழிப்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோவில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் இத்தகைய வீண் செலவுகள் தேவையா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.மேலும் மகா சிவராத்திரி விழாவுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்தாமல் அனாவசியச் செலவுகள் இல்லாமல் நன்கொடையாளா்கள் மூலமாக முறையான கணக்குகளுடன் செலவு செய்ய இந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×