search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahalingeshwara"

    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புடையது திருஇடைமருதூர். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதின பரிபாலனத்தில் விளங்குகிறது. “ஈசன் உறைகின்ற இடைமருது” என்று திருஞான சம்பந்தரால் போற்றிப் பாடப்பெற்ற இத்திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. இத்தலம் ‘மத்தியார்கள் சேத்திரம’ என்று போற்றப்படுகிறது. மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம்.

    “திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு” என்று கூறுவது வழக்கம். அதற்கிணங்க இங்கு தெருக்களின் அமைப்பு சிறப்பான ஒன்றாகும்.

    இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு ஸ்ரீமகாலிங்கப் பெருமான் ஆவார். அம்மையார் பெயர் பெருநலமா முல்லையம்மை.
    இத்தலத்தில் தேரோடும் வீதிகளில் கோடியில் விநாயகர் ஆலயமும், கீழை வீதியில் ஸ்ரீ விசுவநாதர் ஆலயமும், தெற்கு வீதியில் ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயமும், மேல வீதியில் ஸ்ரீ ரிஷிபுரீசுவரர் ஆலயமம், திருமஞ்சன வீதியில் (வடக்கு வீதி) ஸ்ரீ சொக்கநாதர் ஆலயமும் அமைந்து நடுவில் ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளதால் இது பஞ்சலிங்கத் தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் மகாதேவர் தமது ஞானசக்தியாகிய உமா தேவியாருக்கு ஆகமங்களை உபதேசிக்க, அன்னையார் அவற்றையெல்லாம் திருவுளங்கொண்டு மகிழ்ந்து ஏற்று இறைவனை வணங்கி, “பிரபோ! இவ்வுலக வளங்களையும் அதற் கொப்ப ஆன்மாக்கள் வழிபட்டு உய்ய தேவரீர் எழுந்தருளிச் சிறப் பிக்கும் தலங்களையும் அவற்றில் உயர்ந்ததாக- சிறந்ததாக விளங் கும் ஒன்றைக் காட்டியருள வேண்டுகிறேன்” என வேண்டினாள்.

    சிவபெருமான் அதை ஏற்று, ரிஷபாரூடராய்க் கைலாயத்தினின்றும் புறப்பட்டு எல்லாத் தலங்களையும் காட்டி, காவிரியின் தென்கரையில் உள்ள இந்த திருவிடை மருதூர் தலத்தை அடைந்தார். “தேவி! இந்தத் தலம் மிகவும் அழகானது. அமைதியானது. எனக்கு அதிகம் விருப்பமானது. இதன் அழகை நீ காண்பாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    உமாதேவியாரும் அந்தத் தலத்தை நன்கு சுற்றிப்பார்த்து, காசிபர் போன்ற முனிவர்கள் தவஞ்செய்தலையும், மற்ற விசேஷங்களையும் கண்டு களிப்புற்றாள். அங்கே தவஞ்செய்யும் முனிவர்கள் தம்முட் பேசிக் கொள்ளும் வினாவிடைகளைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, பார்வதி தேவியோடு ஈஸ்வரனும் ஒரு முகூர்த்த காலம் யாவரும் அறியா வண்ணம் மறைந்திருந்தார்.

    அப்போது அங்கே வந்த அகஸ்திய முனிவரைக் கண்ட தவயோகிகள் அவரை வணங்கி, “தேவரீர் இங்கே எழுந்தருளியிருப்பது நாங்கள் செய்த பாக்கியமே. சுவாமி! யாகம் முதலிய கருமங்களைச் செய்யப் பயனளிப்பது அக்கருமமா? அல்லது ஈஸ்வரனா என்ற சந்தேகம் நெடுநாளாக எங்கள் மனத்தில் உள்ளது தாங்கள் அந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டுகிறோம்” என்றனர்.

    அதைக் கேட்ட மலையமுனி “கர்மா தானே பயன் தராது. அதன் பயனைத் தருபவர் ஈஸ்வரனே” என்று விளக்கிக் கூறி முனிவர்களே, அவனருளாலேயே அவனை அடைய வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. ஆதலால் நீவிர் அருள்வள்ளலாம் உமாதேவியாரைக் குறித்துத் தவம் செய்து அவள் அருளால் ஈசனைத் தரிசியுங்கள்” என்று கூறினார்.

    இதைக்கேட்ட அன்னை இவர்களுக்குக் காட்சி கொடுத்தல் வேண்டும் என்று இறைவனை வேண்ட, “நாம் இப்போது இவர்களுக்கு வெளிப்படுவது முறையன்று. அகஸ்தியன் கூறியபடியே நடக்கட்டும்” என மொழிந்து உமாதேவியுடன் திருக் கயிலாயம் எழுந்தருளினார். பின்பு அகத்திய முனி கூறியபடி அனைவரும் கலை மகளை நோக்கித் தவம் செய்து வேதாகமங்களின் உண்மைப் பொருள் உணர்ந்து, பின் மலர்மகளான லட்சுமியை நோக்கித் தவம் செய்து, யாகத்துக்குரிய பொருள்கள், தடாகம், மண்டபம், சண்பகச் சோலை, நவமணிக்குவியல், காமதேனு, கற்பகம் போன்றவற்றைப் பெற்றனர். பின்பு முனிவர்களுடன் அகஸ்தியரும் உமாதேவியாரை நினைத்து அந்தச் சண்பகச் சோலையிலிருந்து யாகம் வளர்த்துத் தவம் செய்யத் தொடங்கினார்.

    எப்போதும் உமாதேவியாருடைய திருவடிகளை நினைத்துப் பல நாட்கள் தவம் புரிந்தனர். அம்மையாரின் தரிசனம் கிட்டவில்லை. அகஸ்திய முனிவர் பெரிதும் வருந்தினார். திருவருள் கூட்டினாலன்றி எவ்வித முயற்சியும் பயன் தராதன்றோ! அகஸ்தியர் அம்மையார் அருளாமை குறித்துச் சிவபெருமானை வேண்ட, இறைவன் அகஸ்தியர் பால் கனிந்து உமையைத் தரிசனத்துக்கு அனுப்புகிறார்.

    அம்மையார் வேள்விச்சாலையில் அக்னியில் தோன்றிக் காட்சியளிக்கிறார். முனிவர்கள் அம்பிகை வடிவத்தைத் தரிசித்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்கள். ஆடினர், பாடினர், அன்புக் கோஷம் எழுப்பினர். அவளை ஆசனத்தில் இருத்திப் பூசையாற்றினார். தங்களது வேண்டுகோளை இறைவரையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார்கள். அம்பிகை முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று அம்முனிவர்கள் போல் தாமும் தவவேடம் மேற்கொண்டார்.

    அம்பிகை பக்தியுடன் காவிரியில் நீராடி, நித்திய கர்மங்களை முடித்து திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதி, வேண்டிய உபகரணங்களை எல்லாம் சேகரம் செய்து ஐவகை சுத்தியும் செய்து சிவபெருமானை நோக்கி பூஜித்து, பின் இறைவனை தியானித்து மோனநிலையை அடைந்து சிவோக பாவனையில் தவமிருந்தார். இத்திருக்கோலமே மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. இம்மூர்த்தம் இவ்வாலயத்தில் தனிச்சந்நிதியாக திகழ்கிறது.

    இப்படி நிகழும் காலத்தில், அம்பிகை ஹிருதய கமல மத்தியில் இறைவன் ஜோதிர்மய மகாலிங்கமூர்த்தியாய் அவர்களுக்கு தோன்றினார். அதனின்றும் பிறையுடன் கூடிய முடியும், மான், மழு, அபயம், வரதம் அமைந்த திருக்கரங்களுடன் ஏகநாயகமூர்த்தியாய் எழுந்தருளிக் காட்சி அளித்தார்.

    முனிவர்கள் வணக்கத்துடன் துதி செய்து “நாம் செய்த தவம் பலித்தது” என்று கூறி, ஆனந்தப் பரவசமுற்றனர். இறைவன் அம்பிகையை நோக்கி, “உனது தவம் கண்டு மகிழ்ந்தோம். அகஸ்தியர் போன்ற முனிவர்களுக்கும் காட்சியளித்தோம். இனி யாரும் அறியும்படி நாம் முன்னை வடிவமாகக் கொண்ட ஜோதிமய மகாலிங்கத்தை அநாதியாக உள்ள நம் உருவமாகிய லிங்கத்துடன் ஐக்கியத்து பூஜிக்கிறோம்” என்று கூறி தேவர்கள், வானவர்கள் தத்தம் பணிகளைச் செய்து முடித்து இறைவன் அருகே நிற்க, தாம் உரைத்தருளிய வேதாகம் விதிப்படி மகாலிங்கத்தைப் பூஜிக்கலானார்.

    இதைக் கண்ட தேவி, “பிரபோ! பிரம்மன், விஷ்ணு போன்ற தேவர்கள் அன்றோ தங்களை அர்ச்சிப்பர். தாங்கள் இந்த ஜோதிலிங்கத்தில் எவரைப் பூஜித்தீர்கள்?” என்று வினவ, அதற்கு மகேஸ்வரன், “உமையே! பூசித்தோனும் பூசனையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூஜிப்பதற்கு காரணம்.

    இம்முனிவர்களுக்கு நம்மைப் பூஜிக்கும் முறையை அறிவுறுத்தற்பொருட்டே” என்று கூறி முனிவர்களுக்குச் சிவஞானத்தை அருளி, லிங்கத்தின் பெருமையையும் பூஜை செய்யும் முறையையும் பூஜிப்பவர்கள் அடையும் பயனையும் விவரித்து கூறி உமையுடன் திருக்கயிலாயம் சென்றார்.

    பிறகு தேவர்களும் முனிவர்களும் விஸ்வகர்மாவை அழைத்து ஆலயம் அமைக்கும் முறையைக் கூறி அதன்படி கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் போன்ற ஆலயக் கட்டிடங்களை எழுப்பினர். இன்னும் இவ்வாலயத்தில் ஐந்தாம் திருவிழா அன்று தம்மைத் தாமே அர்ச்சித்தல் நடைபெறுகிறது.
    ×