search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Nala Iyakkam"

    மக்கள் நல இயக்கம் கட்சியாக மாறவிருப்பதாக நடிகர் விஷால் கூறியிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. #Vishal #MakkalNalaIyakkam
    நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வந்தார். அது மட்டுமின்றி முக்கிய பிரச்சினைகளின் போதும் குரல் கொடுத்தும் வந்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்தார். வேட்பு மனு தாக்கலுக்கு சில தினங்களே இருந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த சில தினங்களில் பிரசாரம் செய்வதற்கான திட்டங்களையும் தீட்டினார்.

    ஆர்.கே. நகர் தொகுதியில் தெலுங்கு வாக்காளர் அதிகம் என்பதால் விஷால் களம் காண்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. இவற்றுக்கு பதில் அளித்த விஷால் ‘2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்ததால் தான் அங்கே பரிச்சயம்’ என்று குறிப்பிட்டார்.

    ஆனால் அவரது வேட்பு மனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்த இரண்டு பேர் தங்களது முன்மொழிவை வாபஸ் பெற்றதால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு தன் ஆதரவை வழங்குவேன் என்று அறிவித்தார். ஆனால் குறிப்பிட்ட யாரையும் ஆதரிக்கவில்லை.

    விஷால் சில நாட்களுக்கு முன்பு இரும்புத்திரை படத்தின் 100-வது நாள், தனது பிறந்தநாள், புதிய இயக்க தொடக்க விழா மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்தினார். அந்த விழாவில் கொடியையும் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பையும் அறிமுகப்படுத்தினார்.



    ‘எனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி புதிய கொடியை அறிமுகம் செய்துள்ளேன். அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்பது இதன் நோக்கம்.

    தெருவில் நடக்கும் அநீதியை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. சும்மா இருந்தால், பிணத்துக்கு சமம். அரசியல் என்பது மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்குத்தான். இப்போது அது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. இது அரசியலை நோக்கி பயணிக்கும் இயக்கம் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அரசியல் இயக்கமாக மாறும்’ என்று பேசினார்.

    இந்த நிலையில் விஷால் பேட்டி ஒன்றில் தனது இயக்கம் கட்சியாக மாறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். ‘நிச்சயமாக என் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவேன்.

    அதிகாரத்தில் இருந்தால் தான் நல்லது செய்ய முடியும். எனவே அரசியலுக்கு வருவதில் தவறே இல்லை’ என்று கூறி இருக்கிறார்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு ‘இடைதேர்தல் அறிவிப்பார்களா என்று தெரியவில்லை. இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படவில்லை. அறிவிக்கும் போது நான் என் முடிவை சொல்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    விஷால் இப்படி பட்டும் படாமல் கூறினாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். ‘விஷால் இடைத் தேர்தலில் போட்டியிடுவார். அது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான அடித்தளமாக இருக்கும்’ என்கிறார்கள்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரும் நடிகர்கள் வரிசையில் ரஜினி, கமலுக்கு பின் விஷால் சேர்ந்துள்ளார். #Vishal #MakkalNalaIyakkam

    ×