search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manamadurai market"

    மானாமதுரையில் உள்ள வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என பலரும் அவதியடைந்து வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்ய கடை அமைப்பார்கள். இதுதவிர மதுரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாரச்சந்தையில் கடை அமைத்து வியாபாரம் செய்வார்கள். காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், பலசரக்கு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதால் மானாமதுரை நகரில் உள்ள 18 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வருவார்கள்.

    இந்தநிலையில் மானாமதுரை வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வாரச்சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகள் பலரும் நெருக்கடிக்கு இடையே கடை அமைத்துள்ளனர். 300 முதல் 500 கடைகள் வரை வாரச்சந்தையில் உள்ளன. இவற்றிற்கு கட்டிட வசதி கிடையாது. வாருகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் வாரச்சந்தை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. குறிப்பாக சந்தை ஆரமித்த ஆண்டில் இருந்து ஒப்பந்த தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் வாரச்சந்தை மட்டும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக காணப்படுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாரச்சந்தை ரூ.1 கோடி வரைக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வருமானம் பேரூராட்சிக்கு கிடைத்தும், வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யாமல் இருப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்துதருவதுடன், வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியும் செய்துதர வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். 
    ×