search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marimuthapillai Poet"

    • இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
    • அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கோவில் தோற்றம்

    தில்லை நடராஜர் ஆலயத்தை சுற்றி பல சிவாலயங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் நடராஜர் ஆலயத்தோடு தொடர்பு கொண்டவைதான். இவற்றில் பல ஆலயங்கள் அற்புதங்கள் நிறைந்தவையாகவும் உள்ளது. அப்படி ஒரு ஆலயம்தான், தில்லைவிடங்கன் என்ற கிராமத்தில் உள்ள விடங்கேஸ்வரர் கோவில்.

     தில்லைக்கு வலது கண், தில்லைவிடங்கன் கிராமம். மன்னர் காலத்தில் மாரிமுத்தாப்பிள்ளை என்ற தமிழ்ப் புலவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் பாடுவதோடு, தான் இயற்றிய தமிழ் பாடல்களையும் இறைவன் முன்பாக பாடுவார். அவர் தில்லை நடராஜர் ஆலயத்திற்கு செல்லும்போது, தனது தோட்டத்தில் இருந்து வாழைப்பழம் எடுத்துச் செல்வார். இது ஒரு நாளும் தவறியது இல்லை.

    ஒரு நாள் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. அதனால் தில்லை நடராஜர் கோவிலுக்கு எப்படிச் செல்வது என்ற கவலையில் ஆழ்ந்தார். ஒரு கட்டத்தில் ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லத் தொடங்கினார். வழியில் கந்தமங்கலம் என்ற கிராமத்திற்கு வந்தபோது, மழையின் கடுமை அதிகமானது. இதற்கு மேல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டதால், அந்த கிராமத்திலேயே ஒரு ஓரமாக தங்கினார். சில மணி நேரங்களுக்குப்பிறகு மழை குறைந்ததும் மீண்டும் கோவிலை நோக்கி பயணித்தார்.

    `நாம் செல்வதற்குள் உச்சிகால பூஜை முடிந்துவிடுமோ? ஈசனுக்கு வாழைக் கனியை கொடுக்க முடியாதோ?' என்ற கவலையோடு, `நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலை அடைந்தார். அவரைப் பார்த்ததும் கோவில் அர்ச்சகர்கள், "வாருங்கள் புலவரே.. இறைவனுக்கு கனியை கொடுத்து விட்டு எங்கே சென்றீர்கள்? உச்சிகால பூஜை தொடங்கப்போகிறது. வந்து சாமியை தரிசனம் செய்யுங்கள்" என்றனர்.

    அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புலவர், `சுவாமி என்ன சொல்கிறீர்கள்? நான் மழையால் பல மணி நேரம் ஓரிடத்தில் ஒதுங்கி நின்று விட்டு இப்போதுதான் ஆலயத்திற்கு வருகிறேன். வழக்கமாக நான் அளிக்கும் வாழைப்பழம் கூட என் கையில்தான் உள்ளது. ஆனால் ஏற்கனவே நான் வந்து பழம் தந்ததாக நீங்கள் சொல்கிறீர்களே?" என்று கேட்டார்.

    அர்ச்சகர்களும் ஆச்சரியப்பட்டுப் போயினர். வந்தது ஈசன்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். உடனே இறைவனின் மகிமையை எண்ணி, கண்ணீர் வடித்த புலவர், இறைவனை நினைத்து மனமுருகப் பாடினார். பின்னர் அவர் இதுபற்றி தன் ஊர் மக்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.

    அன்று இரவு புலவர் உறங்கியதும், அவரது கனவில் தோன்றிய ஈசன், "என்னைக் காண நீ தினம் தினம் பல சிரமங்களை சந்தித்து தில்லை வருகிறாய். இனி நீ அப்படி தில்லை வரவேண்டிய அவசியம் இல்லை. தில்லைவிடங்கனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் நான் இருக்கிறேன். என்னைக் கொண்டு வந்து இங்கே வைத்து வழிபாடு செய். உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்" என்றார்.

    மறுநாள் காலை இதுபற்றி ஊர் மக்களிடம் புலவர் தெரிவித்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. வழக்கம்போல அவரை எள்ளி நகையாடினர். இருப்பினும் மனம் தளராத அந்த புலவர், ஈசன் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டு மகிழ்ந்தார். ஆனால் அந்த சிவலிங்கம் பெரியதாக இருந்ததால், எப்படி இங்கிருந்து தூக்கிச் செல்வது என்று தவித்தார்.

    அப்போது அருகில் மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு, அங்கு சென்றார். அங்கே சிலர் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சிவலிங்கத்தை, தன் ஊருக்கு கொண்டு செல்ல உதவும்படி கேட்டார். ஆனால் அவர்களோ, `அப்படிச் செய்தால் எங்களுக்கு ஒரு நாள் கூலி போய்விடும். அந்த கூலியை நீங்கள் தருவதாக சொன்னால், நாங்கள் சிவலிங்கத்தை எடுத்து வந்து உங்கள் ஊரில் கொடுக்கிறோம்" என்றனர்.

    அவரும் சரி என்று கூற, அவர்கள் சிவலிங்கத்தை தில்லைவிடங்கன் கிராமத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போதுதான் ஊர் மக்கள், புலவரை நம்பினர். ஊர் மக்கள் அனைவரும் புலவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்களுக்கு ஊதியம் கொடுக்க அவர்களைத் தேடியபோது, அவர்கள் அங்கே இல்லை. அந்த சிவலிங்கத்தை தூக்கி வந்தவர்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்த தேவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.

    முதல் வேலையாக அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அந்த ஊரிலேயே இருந்த ஒரு சிற்பி, அம்பாள் சிலை வடிக்கத் தொடங்கினார். அதையும் அதன் அருகிலேயே பிரதிஷ்டை செய்தனர். நாளடைவில் பல்வேறு சன்னிதிகளுடன் இந்த ஆலயம் விரிவாக்கம் பெறத் தொடங்கியது என்று இந்த ஆலயம் உருவான வரலாறு சொல்லப்படுகிறது.

     ஆலய அமைப்பு

    கிழக்கு பார்த்தபடி அமைந்த இந்த ஆலயம், மகா மண்டபத்தின் வெளியே நந்தி, பலிபீடம், இடதுபக்கம் நவக்கிரக சன்னிதியைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் மேலே சிவன்-பார்வதியும், அவர்களின் இருபுறமும் நந்தியும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி ஆலயத்திற்குள் நுழைந்தால், இடப்பக்கம் நால்வர் சன்னிதி, தொடர்ந்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், நடராஜர் - சிவகாம சுந்தரி சன்னிதிகளும், வலது பக்கம் ஒரே சன்னிதியில் சூரியன் - சந்திரன், பைரவர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். ஆலயத்தில் தெற்கு நோக்கி பர்வதாம்பாள் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். கருவறைக்குள் வட்டவடிவிலான பீடத்தில் விடங்கேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 9 மணிக்குள், அம்பாளின் திருப்பாதத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலர்கள் சமர்ப்பித்து மஞ்சள் கட்டிய திருமாங்கல்யக் கயிற்றை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிப்பார்கள். இதனால் திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள்.

    பொதுவாக கருவறைக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் திருமணத் தடை என்ற கூட்டுப் பிரார்த்தனைக்காக மட்டும், அம்பாளின் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் திங்கட்கிழமை தோறும் காலையில் இவ்வாலயம் வந்து, அப்போது இறைவனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு, அபிஷேக தீர்த்தத்தை வாங்கி பருகினால், பேச்சுக் குறைபாடு நீங்கும் என்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தம்பதியராக இங்கே வந்து மகா மண்டபத்தில் அமர்ந்து `ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை பூஜை, பிரதோஷம் ஆகிய தினங்களும் சிறப்பாக வழிபடப்படும்.

    அமைவிடம்

    சிதம்பரத்தில் இருந்து கிள்ளை செல்லும் பேருந்தில் சென்றால் தில்லைவிடங்கன் கிராமத்தை அடையலாம்.

    ×