search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayer Priya"

    • இரவில் பெண்கள் பயணம் செய்வது பாதுகாப்பாக இல்லை.
    • பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான நகரமாக மாற்றுவதே நோக்கம்.

    சென்னை:

    பொது இடங்களில் தப்புன்னு தெரிஞ்சா பட்டுன்னு கேட்கணும் என்பது பெரும்பாலும் எல்லோரும் சொல்வதுதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியபடுவதில்லை. நமக்கென்ன... என்று ஒதுங்கி கொள்பவர்கள்தான் அதிகம்.

    இந்த மாதிரி எல்லோரும் ஒதுங்கி கொள்வதால்தான் தப்பு செய்பவர்கள் துணிந்து செய்கிறார்கள்.

    இப்போது சென்னை மாநகராட்சியே இந்த கோஷத்தை முன்னெடுத்துள்ளது. மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் "தப்புன்னு தெரிஞ்சா பட்டுன்னு கேளு" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை திரு.வி.க. பூங்காவில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு தொடர்பான காணொலி காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்தன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க பார்வையாளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும்.

    ஆபத்துகளில் சிக்கி கொள்ளும் பெண்கள் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் உதவி கோரலாம். இந்த எண் அனைத்து பகுதியிலும் அறிவிப்பு பலகைகளில் பொறிக்கப்படும் என்றும் மேயர் பிரியா கூறினார்.

    உதவி எண்களை இயக்க போதுமான பணியாளர்கள் இல்லையே என்ற கேள்விக்கு அதுபற்றி கவனிக்கப்படும். கூடுதலாக 50 பேர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார். மேலும் சென்னையை பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான நகரமாக மாற்றுவதே நோக்கம் என்றும் கூறினார்.

    ஆனால் 3 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்து ஆய்வில் பொது இடங்களில் பெண்கள் சீண்டலுக்கு ஆளாகும் போது யாரும் தலையிட்டு தட்டி கேட்க முன்வருவதில்லை என்று 62 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    கடந்த 6 வருடமாக ஆட்டோ ஓட்டி வரும் ஆட்டோ டிரைவரான மோகனா என்பவர் கூறும் போது, "தினமும் ஆண்களின் கேலி, கிண்டல்களை சகித்து கொண்டுதான் வேலை செய்வதாக" கூறினார். இதே போல் பெண் பயணிகளும் கேலி, கிண்டல், சீண்டல்களுக்கு ஆளாவதாக கூறினார்.

    ஆட்டோ டிரைவர் கலையரசி கூறும்போது, பெண்கள் பகலில் ஆட்டோ ஓட்டுவது பாதுகாப்பானதாக உள்ளது. என்றாலும் ஓரளவு தைரியத்துடன் ஆட்டோ ஓட்ட முடிகிறது. ஆனால் இரவில் மது போதையில் வரும் நபர்களால் பெண்கள் இரவில் ஆட்டோ ஓட்டுவது என்பது பாதுகாப்பற்றது. எனவே இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது" என்றார்.

    ஆட்டோ ஓட்டும் பெண் டிரைவர்களுக்காக வீரப் பெண் முன்னேற்ற சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் இருக்கும் 8 சதவீத பெண்கள் தனி மரமாகவே இருக்கிறார்கள். பெரும்பாலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

    பூந்தமல்லி பைபாஸ் சாலை போன்ற சில பகுதிகளில் இரவில் பெண்கள் பயணம் செய்வது பாதுகாப்பாக இல்லை என்றும் ஆட்டோ ஓட்டும் பெண்கள் கூறினார்கள்.

    பொது இடங்களில் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானால் பொதுமக்கள் உடனே தட்டி கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன்குமார், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மண்டலக் குழு தலைவர் ஜெயின், பாலினம், கொள்கை, ஆய்வகத்தின் குழு தலைவர் மீரா சுந்தர்ரா ஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×