search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MBBS and BDS"

    மருத்துவம், பொறியியல் தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பி.இ. படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் கீர்த்தனா ரவி முதலிடம், மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளனர். #TNEARankList #MBBSRankList
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு முதன்முதலாக ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான சான்றிதழ் சரி பார்க்கும் பணி 42 மையங்களில் நடந்தது.

    இதையடுத்து தர வரிசைப்பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று 10 மாணவ-மாணவிகள் முதலிடத்தை பெற்றனர்.

    கோவை  மாணவி கீர்த்தனா ரவி


    கீர்த்தனா ரவி (கோவை), ரித்விக் (மதுரை), ஸ்ரீவர்ஷினி (திருச்சி), அர்ஜுன் (கோவை), சுஜிதா (புதுக்கோட்டை), அப்துல்காதர் (கிருஷ்ணகிரி), யமுனா (சிவகங்கை), நிஷா (திருவள்ளூர்), நிதிஷ்குமார் (தஞ்சாவூர்), மணிகண்டன் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்தனர்.

    தர வரிசைப் பட்டியலில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதை மாணவர்கள் சரி செய்து கொள்வதற்கு 1 வாரம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. சென்னைக்கு நேரில் வந்து மாணவர் சேர்க்கை செயலாளரை அணுகி அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

    பொறியியல் படிப்பில் சேருவதற்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேரின் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது. 5 ஆயிரத்து 397 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    மருத்துவ கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ந்தேதி வரை நடைபெறுவதால் அதன் பிறகு என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். ஜூலை 30-ந்தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவாகும். ஆனால் கடந்த ஆண்டை போல நாம் இந்த வருடமும் கலந்தாய்வை நடத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு கேட்டிருக்கிறோம்.

    என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 40 ஆயிரம் பேர் வேறு படிப்புக்கு மாறி இருக்கிறார்கள். இது வழக்கமான ஒன்றுதான். ஏதாவது ஒரு படிப்பில் சேர வேண்டும் என்பதற்காக விண்ணப்பிப்பது வழக்கம். அதன்படி அவர்கள் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் இதர பாடப் பிரிவுகளை தேர்வு செய்திருக்கலாம்.

    கடந்த ஆண்டு 580 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டன. இந்த வருடம் அவற்றின் எண்ணிக்கை 509 ஆக குறைந்துள்ளது. 26 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் அனுமதி பெறவில்லை.

    இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 865 பொறியியல் இடங்கள் உள்ளன. இதில் 18 ஆயிரத்து 771 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும். அதனை அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

    என்ஜினீயரிங் கல்வி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டை போல தரச்சான்று பெற்ற கல்லூரிகளுக்கு ரூ.55 ஆயிரமும், தரச்சான்று பெறாத கல்லூரிகளுக்கு ரூ.50 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தரச்சான்று பெற்ற கல்லூரிகளுக்கு ரூ.87 ஆயிரமும், தரச்சான்று பெறாத கல்லூரிகளுக்கு ரூ. 85 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    கலந்தாய்வு 5 கட்டமாக நடைபெறும். பிளஸ்-2 மார்க் அடிப்படையில் தான் அடுத்த ஆண்டும் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும். நீட் தேர்வு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நேரடியாக சென்னையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துணைவேந்தர் சூரப்பா, தொழில் நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதே போல எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

    நீட் தேர்வு அடிப்படையில் ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாணவி

    1. கீர்த்தனா (சென்னை)- 676 மதிப்பெண்.
    2. ராஜ்செந்தூர் அபிஷேக் (தர்மபுரி)-656 மதிப்பெண்.
    3. பிரவீன்.ஆர். (சென்னை) - 650 மதிப்பெண்.
    4. முகமது சொயிப் ஹசன் (சென்னை)- 644 மதிப்பெண்.
    5. ராகவேந்திரன் டி.வி. (திருவள்ளூர்)- 626 மதிப் பெண்.
    6. அரவிந்த்.எஸ் (திருப்பூர்) - 625 மதிப்பெண்.
    7. ஹரி நரேந்திரன் (திருச்சி)- 625 மதிப்பெண்.
    8. ஆர்த்தி சக்தி பாலா சி.ஆர். (திருநெல்வேலி)- 623 மதிப்பெண்-.
    9. யெந்தூரி ருத்விக் (சென்னை)- 621 மதிப்பெண்-.
    10. ரவி பாரதி யு.எம். (ஈரோடு)- 617 மதிப்பெண்-.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2900 எம்.பி.பி.எஸ். இடங்கள், சிதம்பரம் அண்ணாமலை பலக்கலைக் கழகத்தில் 150 இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 3,150 இடங்கள் உள்ளன. இது தவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,200 எம்.பி.பி.எஸ். இடங்களையும் சேர்த்து 4,350 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக 3393 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1198 பி.டி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    முதல் கட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவில் 28 ஆயிரத்து 67 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

    மாநில ஒதுக்கீட்டு பிரிவில் 21 ஆயிரத்து 204 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7, பி.டி.எஸ். பிரிவில் 1 இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு பி.டி.எஸ். இடமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு 1-ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றே பொது கலந்தாய்வும் தொடங்கப்படும்.

    மாற்றுத் திறனாளி இடத்துக்கு ஒருவரும், விளையாட்டு பிரிவில் 26 பேரும், முன்னாள் ராணுவத்தினர் 469 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படுகிறது.

    மருத்துவ படிப்புக்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 5449 பேரும், ஐ.சி.எஸ்.இ. மாணவர்கள் 650 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். மருத்துவ கவுன்சில் அனுமதித்த கல்லூரிகளில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பிப்பவர்களை தடுக்க சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. யாராவது விண்ணப்பித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ். இடங்களில் முதலிடத்தை தக்க வைத்திருப்பது தமிழகத்தின் வெற்றி. தமிழ்நாட்டில் முதல் முறையாக தனியாருக்கு சொந்தமான வேலூர் சி.எம்.சி. கல்லூரியில் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது.

    மருத்துவ படிப்புக்கு 3-ம் பாலினத்தவர் ஒருவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, செயலாளர் செல்வராஜன் உடனிருந்தனர். #TNEARankList #MBBSRankList
    ×