search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mega alliance"

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். #ParliamentElection
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான தேர்தல் தேதி இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து சில முக்கிய மாநிலங்களையும் இழந்தது. இதைத் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க.வை வீழ்த்த இயலாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மெகா கூட்டணியை உருவாக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் மாநிலங்களில் வலுவாக உள்ள பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக மாறின. அது மட்டுமின்றி கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் முக்கியஅங்கம் வகித்த சில கட்சிகளும் பா.ஜ.க.விடம் இருந்து விலகி காங்கிரசின் தலைமையை ஏற்க முன் வந்துள்ளன. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன.

    பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ்கொண்டு வரும் திட்டத்தில் காங்கிரசை விட தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்குத் தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து, கூடுதல் நிதி தராததால் கோபம் அடைந்த சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, இந்த மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளார். பா.ஜ.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அவர் காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார்.

    அது மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசி மெகா கூட்டணிக்குள் கொண்டு வந்தார். கடந்த மாதம் 22-ந்தேதியே எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் 5 மாநில தேர்தல் பிரசாரம் காரணமாக அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    5 மாநில தேர்தல் முடிந்து நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் உள்ள அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி 14 கட்சித் தலைவர்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த 14 கட்சிகள் விபரம் வருமாறு:-

    1. காங்கிரஸ்

    2. திமுக

    3. தெலுங்கு தேசம்

    4. திரிணாமுல் காங்கிரஸ்

    5. தேசியவாத காங்கிரஸ்

    6. பகுஜன் சமாஜ்

    7. சமாஜ்வாதி

    8. ராஷ்டீரிய ஜனதா தளம்

    9. இந்திய கம்யூனிஸ்டு

    10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

    11. ஆம்ஆத்மி

    12. தேசிய மாநாட்டு கட்சி

    13. மதச்சார்பற்ற

    14. லோக் தந்திரிக் ஜனதா தளம் (சரத்யாதவ் கட்சி)

    இந்த 14 கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர கேரளா, பஞ்சாப், புதுச்சேரி முதல்- மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் நேற்று முதல் குவிந்தனர்.


    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக நேற்று டெல்லி சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அவர் 16-ந்தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.

    மு.க.ஸ்டாலினை தொடர்ந்து நேற்று மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றார். இன்று காலை மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் சத்தீஷ் சந்திரா மிஸ்ரா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்று திரண்டுள்ள 14 கட்சிகளின் தலைவர்கள் இன்று தான் முதன் முதலாக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட இதுவரை இல்லாத அளவுக்கு மெகா கூட்டணிக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 14 எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கவும், மாநிலங்களுக்கு ஏற்ப கூட்டணியில் தொகுதி பங்கீடுகளை செய்து கொள்ளவும் முடிவு செய்யப்படுகிறது.

    அதோடு ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க, எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்ற வியூகம் குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்த வியூகம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தும் மிக முக்கியமான ஆயுதமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    மாநிலங்களில் செல்வாக்கு மிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஒரே இடத்துக்கு வந்து இருப்பதால் இது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவருமே மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் அனுபவம் பெற்றவர்கள். முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே இந்த மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.


    ராகுலை முன் நிறுத்தினால் வெற்றி பெற இயலுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இப்போது முடிவு செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். தேர்தல் முடிந்து கட்சிகள் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் மத்திய மந்திரி சபையை அமைக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேவைப்பட்டால் பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவை கேட்டு பெறும் வியூகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வகுத்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் இந்த வியூகங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.

    அதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த தீர்மானங்கள் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #ParliamentElection #Congress #DMK #BJP
    மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒன்று, அது கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுளை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி குழப்பம் நிறைந்தது என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறியதாவது:–

    இந்தியாவில் மெகா கூட்டணிக்கு நீண்ட வரலாறு உண்டு. சந்திரசேகர், வி.பி.சிங், சரண் சிங், ஐ.கே.குஜ்ரால், தேவேகவுடா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இதற்காக முயற்சி நடந்தது. இது, கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுட்காலத்தை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆகும்.

    அந்த வகையில் மெகா கூட்டணி ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தோல்வியடைந்த திட்டம் ஆகும். மிகப்பெரிய கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய கருவும், அதைச்சுற்றி சிறிய குழுக்களும் இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் அவை இல்லை. தகுதியில்லாத தலைவர்கள் அல்லது குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காக கூட்டணி சேர முயலும் தலைவர்களை கொண்டு கூட்டணி அமைக்க முடியாது.

    அப்படி இது போன்ற ஒரு கூட்டத்தை நீங்கள் அமைத்தால், வலுவான தலைவரை கொண்ட ஒரு நிலையான அரசுக்கும், முழுவதும் குழப்ப நிலையை கொண்டிருக்கும் ஒரு கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகவே 2019 தேர்தல் இருக்கும். இதில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும்.

    சர்வதேச தேக்கநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருந்த போதும், இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் தேவைப்படும் நேரங்களில் இணக்கம், நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தேவைப்படுகிறது. இதற்கு குழப்பவாத கூட்டணிகள் உதவாது.

    வாராக்கடன்கள் அதிகரிப்பதற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த வி‌ஷயத்தில் சிலர் வளர வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த 2007–08 ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.18 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச தேக்க நிலை நிலவியதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 2014–ல் இது ரூ.55 லட்சம் கோடியாக உயர்ந்தது.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வங்கிகள் கடன் வழங்கும் இலக்கை ஆண்டுதோறும் 31 சதவீதம் அதிகரித்தது. இதனால் திறனற்ற மற்றும் நிலையற்ற திட்டங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்துதான் வங்கி கொள்ளை தொடங்கி இருக்கிறது. எனவே இந்த உண்மையை காங்கிரஸ் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் ஆதார் மீதான அரசின் சட்டப்பூர்வ நோக்கத்தை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு உள்ளது. இதில் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதன் மூலம் இதை மீண்டும் கொண்டுவர முடியும்.

    ஓரினச்சேர்க்கை விவகாரத்தை அடிப்படை உரிமையாகவும், கருத்து சுதந்திரமாகவும் மாற்றியமைத்தால் பள்ளி விடுதி, சிறை, ராணுவ முகாம்களில் இந்த பாலியல் நடவடிக்கைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட நடைமுறைகளில் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா போன்ற ஒரு பன்மைத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், இதன்மூலம் பல சமூக விளைவுகள் நேரிடக்கூடும். அப்படி இந்த உத்தரவில் உறுதியாக இருந்தால் அரசியல் சட்டம் 14 மற்றும் 21–ம் பிரிவுகளை அனைத்து மதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
    ×