search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menses Pain"

    மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.
    இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. மாதவிடாய் சமயத்தில் விரிவடைந்திருக்கும் கர்ப்பப்பை, குருதி வெளியேறி சுருங்குவதால் அந்த வலி ஏற்படுகிறது. மாதவிடாய் வலி என்பது இயல்பானது.

    அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில தொந்தரவான அறிகுறிகள் தோன்றுகின்றன. இது சகஜம்தான். இந்தக் காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ரொஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்களால் உடலில் மேற்சொன்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனதளவிலும் உணர்வுகளும் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இந்த வலி அதிகமாகும்போது சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குக்கூட ஏற்படும் வாய்ப்புண்டு. மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும்தான். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.

    கருப்பையில் பைப்ராய்டு கட்டிகள் (சாதாரண கட்டி) இருப்பவர்களுக்கு வலி வரலாம். Entometeriosis எனப்படும் பிரச்சனையாலும் வலி வரலாம். அதாவது கருப்பைக்குள் வளர வேண்டிய அந்த சதைப்பகுதி (உள் மென் சீத சவ்வு) கர்ப்பப்பைக்கு வெளிப்புறம், சிறுநீர்ப் பாதை அல்லது மலக்குடலின் வெளிப்புறமும் சிலருக்கு உண்டாகி இருக்கும். மாதவிடாய் சமயங்களில் அங்கும் குருதி மடிப்புகள் உருவாகும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு அவர்களுக்கு வெளிப்புறம் எங்கெல்லாம் அந்த சவ்வு இருக்கிறதோ அங்கெல்லாம் ஏற்படும்.

    அதனால் மாதவிடாயின் போது ரத்தப்போக்கு அல்லது ரத்தக்கசிவு அதிகமாக இருக்கும். மாதவிடாயின்போது ரத்தப்போக்கு பெண்களின் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் கருப்பைக்கு வெளிப்புறமும் குருதி மடிப்புகள் உள்ளவர்களுக்கு ஆங்காங்கே ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழியில்லாமல் உடலின் உள்ளேயே தங்கும்போது அது பிரச்னைகளை உண்டாக்கி அவர்களுக்கு வலி அதிகமாக ஏற்படும். இந்தப் பிரச்னை சிலருக்கு மரபுரீதியாக ஏற்படலாம்.

    சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினாலும் ஏற்படலாம். சாதாரணமான மாதவிடாய் வலியைப் பொறுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் அதிகமான அளவில் வலி இருக்கும் போது வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். ஹெவி டோஸ் எடுக்கக்கூடாது. தாங்க முடியாத அளவு வலி வரும் போது மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டியது அவசியம். ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து தீர்வு காண்பது அவசியம். மாதவிடாயின்போது அதிகளவு உதிரப் போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

    மாதவிடாய் வலியைக் குறைக்க வைட்டமின் பி1, தையமின், வைட்டமின்பி6, பைரடாக்சின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உணவில் சரியான அளவில் இடம்பெற வேண்டும். பயறு வகைகள், தானிய வகைகள், நட்ஸ், அசைவ உணவுகள் (மீட்) போன்றவற்றை தேவையான அளவு சாப்பிட வேண்டும். கால்சியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நிறுத்தம் என்பது 45லிருந்து 60 வரை உள்ள காலகட்டத்தில் நடக்கும். மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடும். இந்த காலகட்டத்தில் பெண்களின் பாலின பண்பிற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பது குறைகிறது. இந்த உதிரப்போக்கு குறையும் போது வலி ஏற்படுவதும் குறைகிறது.
    ×