search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mill employees"

    அதிகாரத்தின் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை கவர்னர் கிரண்பேடி தனது அலுவலகத்தை துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்துள்ளார்.

    புதுவையில் தலைமைச் செயலகம் மற்றும் சபாநாயகரின் கீழ் செயல்படும் சட்டமன்ற செயலகம் என 2 செயலகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்திருப்பது விதிமுறையை மீறிய செயலாகும்.ஏற்கனவே தனது அதிகாரத்தை மீறி அரசு அலுவலகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும், பல்வேறு உத்தரவுகளையும் கவர்னர் பிறப்பித்து வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கை தவறு என்று பலமுறை எடுத்து கூறியும் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.

    சமீபத்தில் கவர்னர் தனது அலுவலகத்தை தேர்வு மையமாகவும் மாற்றி உள்ளார். சமூகநலத்துறை அலுவலக அதிகாரிகளை வரவழைத்து தேர்வு நடத்தி உள்ளார். அரசு ஊழியர்களுக்கு தேர்வு நடத்த தனி அமைப்பு ஏற்கனவே உள்ளது.

    கவர்னர் இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு என்ன செய்ய போகிறார்? அதிகாரிகளுக்கு கவர்னர் சான்றிதழ் அளித்தாலும் அது செல்லாது. அரசு அதிகாரிகளுக்கு தேர்வு நடத்தி இருப்பது அதிகார உச்சகட்டம்.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக பொங்கல் பரிசு அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்திலும் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு புதுவை அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க அரசு சார்பில் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் கவர்னர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், அந்தியோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் பொங்கல் பரிசு வழங்கும் படி கோப்பை திருப்பி அனுப்பி உள்ளார்.

    மீண்டும் கவர்னருக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோப்பு அனுப்ப உள்ளோம்.

    மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த கோப்பை கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால், கவர்னர் அந்த கோப்பையும் திருப்பி அனுப்பி விட்டார்

    அதனால் வருகிற 2-ந் தேதி அமைச்சரவையை கூட்டி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக விவாதித்து மீண்டும் கோப்புகளை அனுப்ப உள்ளோம்.

    புதுவை மதசார்பற்ற கட்சிகளின் சார்பில் வருகிற 4-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மாநில அந்தஸ்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்க உள்ளன. அகில இந்திய தலைவர்களுக்கு அந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின்போது முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    ×