search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing Girl Dead Body Rescue In Kasimedu"

    காசிமேட்டில் காணாமல் போன சிறுமியின் உடலை கடற்கரையில் மீட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ராயபுரம்:

    காசிமேடு சிங்காரவேலர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். மீனவர். இவரது மனைவி மாலினி. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் ஜெசிகா (10) அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று இரவு பிரகாஷ் தனது குடும்பத்துடன் அங்குள்ள சமயபுரத்து அம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறால் ஏலமிடும் பகுதியில் உள்ள கடற்கரையில் கங்கை திரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சிறுமி ஜெசிகா தனது தாயிடம் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாள்.

    அதன்பின் இரவு 8 மணி அளவில் பிரகாஷ் வீட்டுக்கு வந்தபோது அங்கு சிறுமி ஜெசிகா இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து காசிமேடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் சம்பவம் நடந்த பகுதி தங்களது எல்லைக்குட்பட்டது அல்ல என்று கூறினர்.

    இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் செய்தனர். அவர்களும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி புகாரை வாங்கவில்லை.

    இதனால் அலைக்கழிக்கப்பட்ட உறவினர்கள் பதட்டம் அடைந்தனர். பின்னர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் உறவினர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காசிமேடு கடற்கரை மணல் பரப்பில் ஜெசிகா மயங்கிய நிலையில் கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவளை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சிறுமி மாயமானதும் புகாரை உடனே வாங்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து இரவு 11 மணிக்கு காசிமேடு சூரியநாராயணன் தோட்டம் சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி சாவில் மர்மம் இருக்கிறது.

    போலீசார் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    வீட்டுக்கு சென்ற சிறுமி கடற்கரையில் எப்படி பிணமாக கிடந்தாள் என்பதில் மர்மம் நீடிக்கிறது. வீட்டுக்கு சென்ற அவளை யாராவது கடத்தி சென்று கொலை செய்து வீசினார்களா என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கோவில் திருவிழாவில் இருந்து வீட்டுக்கு சென்ற ஜெசிகா கடற்கரையில் பிணமாக கிடந்தாள். அவள் மீது மணல்கள் கிடந்தன முகத்தில் கீறல்கள் இருந்தன.

    வீட்டில் இருந்த அவள் எப்படி கடற்கரையில் பிணமாக கிடந்தாள் என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவளை யாராவது கடத்தி சென்று கொலை செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

    முதலில் நாங்கள் தேடிய போது கடற்கரையில் அவள் பிணமாக கிடக்கவில்லை. போலீசில் புகார் அளித்த பின்னர் தேடிய போதுதான் அங்கு பிணமாக கிடந்தாள்.

    கடலில் விழுந்து அவள் இறந்திருக்க வாய்ப்பில்லை. அவளது உடல் தண்ணீரால் நனையாமல் இருந்தது.

    போலீசார் உடனே புகார் வாங்கி இருந்தால் அவளை மீட்டு இருக்கலாம் ஆனால் போலீசார் எங்களை அலை கழித்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசார் கூறும் போது சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

    அதன் அறிக்கை வந்த பிறகு தான், பாலியல் கொடுமை செய்யப்பட்டு இறந்தாளா? அல்லது வேறு காரணமா என்பது தெரிய வரும் என்றார்.

    இச்சம்பவம் காசிமேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×