search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi oath taking ceremony. BJP worker family. மோடி"

    மேற்கு வங்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக தொண்டரின் குடும்பத்தினர், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். நாளை மாலை ஜனாதிபதி மாளிகையில் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 

    அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்கிறார்கள்.

    மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    இது தவிர மாநில கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், துறை சார்ந்த பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல தரப்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவ்வகையில், மேற்கு வங்கத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர் சந்தன் ஷாவின் குடும்பத்தினரும், மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி சென்று பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கான்கிநாரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, சந்தன் ஷா சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதனை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

    மோடியின் வெற்றிக்காக தன் கணவர் உயிரையே கொடுத்திருப்பதாகவும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் சந்தன் ஷாவின் மனைவி கூறியிருக்கிறார். 
    ×