search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money for vote"

    என்ன நடவடிக்கை எடுத்தாலும் புதிய வழிகளை கண்டுபிடித்து ஓட்டுக்கு பணம் சப்ளை செய்வதாக முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். #NareshGupta
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நீண்டகாலம் பணியில் இருந்தவர் நரேஷ் குப்தா. நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர்.

    தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் காந்தி போதனைகளை பரப்பும் பணியினை செய்து வருகிறார்.

    தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பது குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக அவ்வப்போது மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பண பலத்தை பயன்படுத்துவதை இன்னமும் தடுக்க முடியவில்லை.

    வேட்பாளர்கள் செலவை கண்காணிக்க அதிகளவு பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பறக்கும் படைகள் சோதனை செய்கின்றனர்.

    வருமான வரித்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் துறை மேற்கொள்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.


    ஆனால் இதையெல்லாம் மீறி பணத்தை சப்ளை செய்ய அரசியல்வாதிகள் பல புதிய வழிகளை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு மொத்தமாக பணம் கொடுக்காமல் சிறிய அளவிலான பணத்தை அவ்வப்போது கொடுக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆனால் இப்போது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தாண்டி வாக்காளர்களே ஓட்டு போட தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள். பணம் அல்லது பரிசு பொருட்களை கேட்டு பெறுகிறார்கள். அப்படி கொடுக்காவிட்டால் கோபம் அடைகிறார்கள்.

    அந்த காலத்தில் ஓட்டு போட பணம் கொடுத்தால் வாங்கி கொள்வார்கள். பணம் வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்கள். இப்போது பணம்- பரிசு பொருட்களை வாக்காளர்களே வாங்குவதால் அவற்றை அவர்களுக்கு அளிப்பதில் அரசியல் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    அதுவும் இடைத்தேர்தல் நேரத்தில் இப்போது பணம் கொடுப்பது அதிகரிக்கிறது. அதை கட்டுப்படுத்துவது தேர்தல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

    5 ஆண்டுகளில் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி துறை என 3 தேர்தல் வருகின்றன. எனவே தேர்தலை மனதில் வைத்தே அரசியல் கட்சிகளும், அரசும் செயல்படுகின்றன. இதனால் நீண்ட கால வளர்ச்சிக்காக செயல்படாமல் குறுகிய நோக்கத்துடன் செயல்படுகின்றனர். எனவே இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

    தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றுவது கடினமானது. தேர்தல் ஆணையம் மீது அதிகளவு புகார்களை கூறுவது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்தளவு இல்லை. அங்கு தேர்தல் அதிகாரிக்கு அதிக மரியாதை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #NareshGupta
    ×