search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Commit Suicide"

    பல்லடம் அருகே சிவரஞ்சனி தற்கொலை முயன்ற சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரை சேர்ந்தவர் செந்தில் என்கிற தியாகராஜன்(37). முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர். மில் அதிபராகவும் உள்ளார். இவரது மனைவி சிவரஞ்சனி(30). இவர்களுக்கு ஸ்ரீஹர்சந்த் (7) என்ற மகனும், ஸ்ரீஹர்சிகா என்ற 8 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

    ஸ்ரீஹர்சந்த் அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மனைவியின் அலறல் சத்தம்கேட்டு தியாகராஜன் எழுந்து பார்த்தார். அப்போது சிவரஞ்சனி தீயில் எரிந்து கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். பின்னர் சிவரஞ்சனியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிவரஞ்சனி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் குழந்தைகளை தேடியபோது அவர்கள் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது தண்ணீர் தொட்டி திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த உறவினர் ஒரு குச்சியை விட்டு தேடியபோது ஏதோ தென்பட்டது. உடனே மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

    தண்ணீர் முழுவதும் வெளியேற்றிய பின்னர் பார்த்தபோது குழந்தைகள் ஸ்ரீஹர்சந்த், ஸ்ரீஹர்சிகா ஆகிய இருவரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குழந்தைகளின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மங்களம் போலீசார் நடத்திய விசாரணையில் சிவரஞ்சனி தண்ணீர் தொட்டியில் போட்டு 2 குழந்தைகளையும் கொன்று விட்டு பின்னர் தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ×